வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 27 பைசா சரிந்தது.
இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது 1 டாலர் மதிப்பு ரூ.40.74/40.77 என்ற அளவில் இருந்தது.
பிறகு வர்த்தகம் நடக்கும் போது இந்திய ரூபாயின் மதிப்பு சிறிது அதிகரித்து 1 டாலர் ரூ.40.70/40.71 என்ற அளவில் விற்பனையானது. இது நேற்றைய இறுதி விலையை விட 27 பைசா குறைவு. வெள்ளிக் கிழமை இறுதி விலை 1 டாலர் ரூ. 40.43/40.44.
இந்திய பங்குச் சந்தையில் இன்று குறியீட்டு எண்கள் கடுமையாக சரிந்தன. இதனால் டாலர் வரத்து குறைந்தது. இதுவே ரூபாயின் மதிப்பு சரிய காரணம். அத்துடன் ஆசிய சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை 1 பீப்பாய் 111.42 டாலராக அதிகரித்தது.
இன்று ரூபாயின் மதிப்பு சரிந்ததற்கு, அந்நிய நாடுகளில் பங்குச் சந்தையின் கடும் சரிவு, அத்துடன் சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடியும் காரணம்.
இன்று வங்கிகள் தங்களின் வாடிக்கையாளர்களுக்காக அதிக அளவு டாலரை வாங்கினார்கள். குறிப்பாக பெட்ரோலிய நிறுவனங்களுக்காக வங்கிகள் டாலராக வாங்கினார்கள். இதனால் டாலரின் தேவை அதிகரித்தது. இதுவே டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிய காரணம் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.