டி.வி.எஸ் மோட்டார் நிறுவனம் புதிய என்ஜினுடன் கூடிய ஃப்ளேம் ரக மோட்டார் பைக்கை நேற்று சென்னையி்ல் அறிமுகப்படுத்தியது.
இதில் 125 சி.சி திறனுள்ள ஒரு ஸ்பார்க் ப்ளக் பொருத்தப்பட்டுள்ளது.
இதை அறிமுகப்படுத்தி செய்தியாளர்களிடம் டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தின் சேர்மனும், மேலாண்மை இயக்குநருமான வேணு ஸ்ரீனிவாசன் கூறியதாவது:
இந்த புதிய டி.வி.எஸ். ஃப்ளேம் ரக பைக் மாதத்திற்கு 15 ஆயிரம் விற்பனையாகும். இது அக்டோபர் மாதம் போன்ற பண்டிகை காலங்களில் 20,000 ஆக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கின்றோம்” என்று கூறினார்.
முன்பு விற்பனை செய்யப்பட்ட டி.வி.எஸ். ஃப்ளேம் மோட்டார் பைக் இன்ஜினில் இரண்டு ஸ்பார்க் பிளக் பொருத்தப்பட்டது. இந்த தொழில்நுட்பம் தங்களுக்கு மட்டுமே சொந்தமானது என்று பஜாஜ் நிறுவனம் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதில் தங்கள் தரப்பில் நியாயம் இருப்பதால், வழக்கின் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் நம்பிக்கையுடன் உள்ளது.
இந்நிலையில் ஃப்ளேம் ரக பைக்கிற்கு மக்களிடம், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால், இப்போது டி.வி.எஸ் நிறுவனம் ஒரு ஸ்பார்க் பிளக் இன்ஜினுடன் புதிய ப்ளேம் மோட்டார் பைக்கை அறிமுகப்படுத்தி உள்ளது.
இது பற்றி வேணு ஸ்ரீனிவாசன் கூறுகையில், ஃப்ளேம் பைக்கில் ஸ்பார்க் ப்ளக் தவிர வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. நாங்கள் ஸ்பார்க் ப்ளக்கை மட்டும் விற்பனை செய்யவில்லை. மோட்டார் பைக்கையும் விற்பனை செய்யகின்றோம் என்று குறிப்பிட்டார்.