நிதிநிலை அறிக்கையில் தோல் தொழில்துறை முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டு உள்ளதாகவும், இதனால் ஒரு லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் உருவாகியுள்ளதாகவும் தோல் பொருட்கள் ஏற்றுமதி குழுவின் தலைவர் முக்தாரல் அமீன் கூறியுள்ளார்.
ரூபாய்க்கு எதிரான டாலரின் மதிப்புக் குறைந்து வருவதால், ஏற்கெனவே தோல் பொருட்கள் உற்பத்தித்துறை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், இதனால் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உருவாகியுள்ளதாகவும் அமீன் கவலை தெரிவித்துள்ளார்.
உற்பத்தி துறையில் தோல் உற்பத்தி துறையின் பங்களிப்பு முக்கியமானது என்பதுடன், இத்துறை ஆண்டுக்கு 30,000 கோடி ரூபாய் மதிப்புள்ள தோல் பொருட்களை உற்பத்தி செய்து வருவதாகவும், அதில் 46 விழுக்காடு அளவுக்கு அயல் நாடுகளுக்கு ஏற்றுமதியாவதாகவும் அமீன் தெரிவித்தார்.
பெண்களுக்கும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கும் அதிகப்படியான வேலை வாய்ப்புகளை வழங்கி வரும் நிலையில், இத்துறையின் சிக்கலை தீர்க்க நிதிநிலை அறிக்கையில் எந்த அறிவிப்பும் இடம் பெறாதது மூலம் ஒட்ட மொத்தமாக தோல் தொழில் துறை புறக்கணிக்கப் பட்டதாகவே கருதுவதாக அவர் கூறியுள்ளார்.