நாட்டின் பட்டு உற்பத்தி பதினொராவது திட்டக் காலத்தில் 26 ஆயிரம் மெட்ரிக் டன்னாக அதிகரிக்கும் என்று மத்திய பட்டு வாரியத்தின் உறுப்பினர் செயலர் எம். சத்யவதி தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய பட்டு உற்பத்தி 18,475 மெட்ரிக் டன்னாக உள்ளதாகவும், இது வரும் 11-வது திட்டக் காலத்தின் இறுதிக்குள் 26,000 மெட்ரிக் டன் அளவுக்கு அதிகரிக்கும் என்று வான்யா பட்டு மையத்தை பெங்களூரில் திறந்து வைத்துப்பேசிய எம்.சத்யவதி தெரிவித்துள்ளார்.
பட்டுப்புழு வளர்ப்புத் துறைக்கு கடந்த பத்தாவது திட்டக் காலத்தில் ஒதுக்கப்பட்ட தொகை ரூ.420 கோடி என்றும், இது வரும் பதினொராவது திட்டக் காலத்தில் இரட்டிப்பாக்கப்பட்டு ரூ.880 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தற்போது ரூ.3,300 கோடியாக உள்ள பட்டு உற்பத்தி பதினொராவது திட்டக் கால இறுதிக்குள் ரூ.4,600 கோடியாக உயரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா பட்டு உற்பத்தியில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் உள்ளதாகவும், இந்த நிலையிலிருந்து முன்னேற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். நாட்டின் தற்போதைய பட்டுத் தேவையான 24,000 மெட்ரிக் டன்னில், பற்றாக்குறையான 6,000 மெட்ரிக் டன் பட்டு சீனாவில் இருந்துதான் இறக்குமதி செய்யப்பட்டு வருவதாகவும் சத்யவதி தெரிவித்துள்ளார்.