குறைந்த கட்டண விமான நிறுவனமான இண்டிகோ நிறுவனம் மும்பை - குவகாத்தி இடையிலான தினசரி விமான சேவையை தொடங்கியுள்ளது.
இந்த நிறுவனம் ஏற்கெனவே புதிய விமானங்களை வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது. அந்த அடிப்படையில் புதிய ஏ320 இரக ஏர்பஸ் 17 வது விமானம் வந்தது. இந்த புதிய விமானம் நேற்று முதல் மும்பை-கொல்கத்தா-குவகாத்தி இடையே தனது தினசரி விமான சேவையை தொடங்கியுள்ளது.
இண்டிகோ நிறுவனம் நாள்தோறும் 118 தினசரி விமான சேவைகளை 17 நகரங்களுக்கு இடையே இயக்கி வருகிறது. 6இ 321 என்ற புதிய விமானம் காலை 9.20 -க்கு மும்பையில் இருந்து புறப்பட்டு குவகாத்திக்கு மதியம் 2.55 மணிக்கு போய்ச்சேரும். மும்பை-குவகாத்தி இடையேயான கட்டணம் ரூ.2,099 ஆக இருக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
வரும் 2010 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள முக்கியமான 30 நகரங்களுக்கு இடையே விமான இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அப்போது ஏ320 இரக விமானங்கள் 40 இந்த விமான சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் என்றும் இண்டிகோ நிறுவனத்தின் தலைவரும் தலைமை செயல் அலுவலருமான ப்ரூசி ஆஸ்பி தெரிவித்துள்ளார்.