இரும்புத்தாது ஏற்றுமதியைக் கட்டுப்படுத்துவதற்காக ஏற்றுமதி செய்யப்படும் இரும்புத்தாதுக்கு வரிவிதிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
இந்தியாவில் இரும்புத்தாது இறக்குமதி செய்வது தொடர்பாக நீண்டகால ஒப்பந்தம் ஒன்றை செய்து கொள்ள சீனா தெரிவித்த திட்டத்துக்கு நாங்கள் உடனடியாக பதில் அளிக்கவில்லை என்று மத்திய எஃகு துறைச் செயலாளர் ஜே.எஸ். சர்மா தெரிவித்துள்ளார்.
சீனாவின் பெருகி வரும் எஃகு தேவையை எதிர்க் கொள்ளும் வகையில் அந்நாடு இந்தியாவுடன் இரும்புத்தாது இறக்குமதி தொடர்பாக நீண்டகால ஒப்பந்தம் ஒன்றை செய்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளது. இந்த விருப்பத்தை இந்திய எஃகு துறை அமைச்சக அதிகாரிகளிடம் பெய்ஜிங்கில் நடந்த இரு நாடுகளுக்கு இடையேயான கூட்டத்தில் சீன வர்த்தகத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனா இரும்புத்தாது இறக்குமதி செய்வது தொடர்பாக நீண்டகால ஒப்பந்தத்தை ஆஸ்ட்ரேலியா மற்றும் பிரேசிலுடன் செய்துக் கொண்டுள்ளதைக் சுட்டிக்காட்டிய சீன வர்த்தகத் துறை அதிகாரிகள் அது போன்ற ஒரு ஒப்பந்தத்தை இந்தியாவுடன் செய்துக் கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்த ஒப்பந்தத்தின் படி விலை எதுவும் தற்போது நிர்ணயம் செய்யப்படாது என்றும் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் சீன அரசின் சார்பில், அந்நாட்டின் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த உயர் மட்டக் குழுவின் அதிகாரிகள், சீனாவின் மிகப்பெரிய இரும்புத்தாது வர்த்தக நிறுவனமான சைனா ஸ்டீல் நிறுவன அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இந்தியாவில் ஏராளமான அளவில் இரும்புத்தாது உள்ளதாகவும், அரசு அதனை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டு உள்ளதாகவும் மத்திய எஃகு துறைச் செயலாளர் சர்மா தெரிவித்துள்ளார்.
நாட்டில் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்கள் நீண்ட காலமாகவே இரும்புத்தாது ஏற்றுமதியைக் கட்டுப்படுத்துவதுடன், உள்நாட்டு நிறுவனங்களுக்கு தடையற்ற விநியோகம் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரேசில், ஆஸ்ட்ரேலியாவுக்கு அடுத்தபடியாக சீனாவுக்கு இரும்புத்தாது அதிகம் விற்கும் நாடு இந்தியா. உலகிலேயே சீனாதான் அதிக இரும்புத்தாது இறக்குமதி செய்யும் நாடாகும்.
இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் 9 கோடியே 30 லட்சம் டன்கள் இரும்புத்தாது ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இதில் 85 விழுக்காடு சீனாவுக்கு ஏற்றுமதியாகின்றது. ஏற்றுமதி செய்யப்படும் இரும்புத்தாதுக்கு 25 விழுக்காடு வரிவிதிக்க நிதியமைச்சகத்துக்கு பரிந்துரைக்க எஃகு துறை திட்டமிட்டுள்ளதாகவும் சர்மா தெரிவித்துள்ளார்.
இதனிடையே எஃகு துறையின் பரிந்துரையை ஏற்று நிதியமைச்சகம் ஏற்றுமதி வரிவிதிக்க ஆதரவு தெரிவித்தால், ஏற்றுமதியின் அளவு குறையும் என்று வர்த்தகத் துறை அமைச்சகம் கருதுவதால் இந்த வரிவிதிப்புக்கு அது எதிர்ப்புத் தெரிவித்து வருவதாகவும்,வரிவிதிப்பு முடிவால் உள்நாட்டு சுரங்கத் தொழில் பாதிக்கப்படும் என்பதால் இத்திட்டத்தை மத்திய சுரங்கத் துறை அமைச்சகமும் எதிர்த்து வருவதாக கூறப்படுகிறது.