இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையே தாராள வர்த்தக ஒப்பந்தத்தை உருவாக்க டர்பனில் நடைபெறும் அமைச்சர்கள் தலைமையிலான உயர்மட்டக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
மேலும் இருதரப்பு உறவை பலப்படுத்துவது எவ்வாறு என்பது குறித்தும் இக்குழு ஆலோசனை நடத்தயுள்ளதாக தென் ஆப்பிரிக்க அயலுறவுத் துறை துணைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் உள்ள கேப்டவுண் நகரில் இன்று தொடங்கியுள்ள இந்திய - தென் ஆப்பிரிக்க கூட்டு அமைச்சரவை குழுவின் 7-வது அமர்வில் இந்திய அயலுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியும், தென் ஆப்பிரிக்க அயலுறவுத் துறை அமைச்சர் நெகோசாசனா டால்மினி-ஜூமா தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் பங்கேற்றுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா,லெசாத்தோ, சுவாசிலேண்ட், நமீபியா ஆகிய நாடுகள் அடங்கிய கூட்டமைப்பான எஸ்.ஏ.சி.யு. மற்றும் இந்தியா இடையே தாராள வர்த்தக ஒப்பந்தத்தை உருவாக்குவது குறித்து முக்கிய பேச்சு நடைபெற உள்ளது.
இதனைத் தொடர்ந்து ஒப்பந்தத்தை செயல்படுத்த தேவையான நடவடிக்கை குறித்து இந்தியாவுடனான முறைப்படியான பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கப்படும் என்று தென் ஆப்பிரிக்க அயலுறவுத் துறை அமைச்சக துணைச் செயலாளர் ஜெர்ரி மட்ஜில்லா தெரிவித்துள்ளார்.
நாளையுடன் முடிவடைய உள்ள இந்தக் கூட்டத்தில் இருநாடுகளுக்கிடையே அயலுறவு மற்றும் அரசு அலுவல், அறிவியல், தொழில் நுட்ப ஒத்துழைப்புக்கான கடவுச்சீட்டு உள்ளவர்களுக்கு விசா பெறுவதில் விலக்கு அளிப்பது தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே கையெழுத்தாகும் என்று எதிர்ப்பார்ப்பதாகவும் ஜெர்ரி மட்ஜில்லா தெரிவித்துள்ளார்.