ஐரோப்பிய ஒன்றியம், ஆசியான் நாடுகள் அமைப்புடன் செய்துகொண்டது போன்ற தாராள வர்த்தக ஒப்பந்தத்தை இந்தியாவுடன் செய்துகொள்ளவது சாத்தியமில்லை என்று அமெரிக்கா கூறியுள்ளது!
அமெரிக்காவின் விவசாய விளைபொருட்களுக்கு இந்தியா தனது சந்தையை முழுமையாக திறக்காததே அமெரிக்காவின் இக்கருத்திற்குக் காரணமாகும்.
“இன்றுள்ள நிலையில், விவசாயத்தை பொறுத்த அளவில் இந்தியா கடைபிடித்துவரும் அணுகுமுறைக்கு அது அமெரிக்காவுடன் தாராள வர்த்தக ஒப்பந்தத்தை உருவாக்கிக்கொள்வது சாத்தியமில்லை என்றே தான் கருதுவதாக” அமெரிக்க வர்த்தக பிரதிநிதி சூசன் ஸ்குவாப் கூறியுள்ளார்.
இந்தியா - அமெரிக்க இடையே சிறிய. நடுத்தர வணிக ஒத்துழைப்பிற்கான உச்சி மாநாடு சிக்காகோ நகரில் நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில் கலந்து கொள்ள வந்த சூசன், ஐரோப்பிய ஒன்றியத்துடனான இந்தியாவின் பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் இறுதி நிலையை எட்டியுள்ளதெனக் கூறினார்.
தொழிலக உற்பத்திகள் மட்டுமின்றி, விவசாய உற்பத்திப் பொருட்களுக்கும் இறக்குமதி தீர்வையை முழுமையாக நீக்கவேண்டும் என்று அமெரிக்கா எதிர்பார்க்கிறது. ஆனால் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் விவசாய விளைபொருட்களால் தனது நாட்டு விவசாயிகள் பாதிப்பிற்குள்ளாவதை இந்தியா விரும்பவில்லை.
அதுமட்டுமின்றி, தனது நாட்டு விவசாய விளை பொருட்களுக்கு அமெரிக்கா அளித்து வரும் மானியங்களைக் குறைக்க வேண்டும் என்று உலக வர்த்தக அமைப்பில் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதுவே இரு நாடுகளுக்கும் இடையிலான தாராள வர்த்தகத்திற்கு பெரும் தடையாக உள்ளது.