நாட்டின் தொலைபேசிச் சேவை வழங்குவதில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 6 கோடியை எட்டியுள்ளது.
இந்த சாதனை மூலம் பாரதி ஏர்டெல் நிறுவனம், உலகம் முழுவதும் உள்ள தொலைபேசி இணைப்பு அதிகம் வழங்கும் நிறுவனங்களின் வளையத்திற்குள் வந்துள்ளது. பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் இந்த 6 கோடி வாடிக்கையாளர்களில் செல்பேசி, பொருத்தப்பட்ட தொலைபேசி இணைப்புகள், பிராட்பேண்ட் சேவைகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அடங்குவர் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
10 கோடி வாடிக்கையாளர்களுடன், பன்னாட்டு அளவீடுகளின் அடிப்படையில் பாரதி ஏர்டெல் நிறுவனத்தை மிகப்பெரிய நிறுவனமாக உருவாக்கும் பயணத்தில் இது ஒரு முக்கியமான மைல்கல் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே வாடிக்கையாளர் வளர்ச்சி விகிதம் அதிகரித்து வந்ததாகவும், கிராமப் புறங்களில் அதிக அளவில் விரிவான சேவையை வழங்க இருக்கின்றோம் என்று இந்நிறுவனத்தின் தலைவரும், முதன்மை செயல் அலுவலருமான மனோஜ் ஹோலி தெரிவித்துள்ளார்.
உலகில் வேகமாக வளர்ந்து வரும் தொலைபேசி நிறுவனங்களில் பாரதி ஏர்டெல் நிறுவனமும் ஒன்று. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்நிறுவனம் 5 கோடி வாடிக்கையாளர் என்ற நிலையை அடைந்தது.
கடந்த மாதம் புதிதாக சேர்ந்துள்ள 61.95 லட்சம் வாடிக்கையாளர்களில் பாரதி ஏர்டெல் நிறுவனம் 22.5 லட்சம் வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. இது கடந்த 2007 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் புதிதாக இணைந்த 22 லட்சம் வாடிக்கையாளர்களை விட அதிகம்.