"இந்தியாவும் ரஷ்யாவும் தங்களது இருதரப்பு வர்த்தக அளவை 2010 ஆம் ஆண்டுக்குள் 1,000 கோடி டாலர்கள் அளவுக்கு உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளன" என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.
இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ரஷ்யப் பிரதமர் விக்டர் ஜுபுகோவும், நமது பிரதமர் மன்மோகன் சிங்கும் புது டெல்லியில் நேற்றுச் (செவ்வாய்க்கிழமை) சந்தித்து 90 நிமிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மன்மோகன் சிங், "இந்தியாவும் ரஷ்யாவும் தங்களது இருதரப்பு வர்த்தக அளவை 2010 ஆம் ஆண்டுக்குள் 1,000 கோடி டாலர்கள் அளவுக்கு உயர்த்த இலக்கை நிர்ணயித்துள்ளன. இதற்காக ஒருங்கிணைந்த பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாட்டை நடைமுறைப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு, வர்த்தகம், பொருளாதார உறவுகள் ஆகியவற்றை வலுப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. சுங்கம், ஆவணங்கள் தொடர்பாக இரு உடன்பாடுகளில் இந்தியாவும் ரஷ்யாவும் கையெழுத்திட்டுள்ளன. இரு நாடுகளின் உறவில் ராணுவ ஒத்துழைப்பு முக்கிய அம்சமாகும். ஹைட்ரோ கார்பன் விடயத்தில் இரு நாடுகளுக்கும் இடையே தொழில் வாய்ப்பு உள்ளது.
அணுசக்தியை ஆக்கபூர்வ பணிகளுக்குப் பயன்படுத்துவது குறித்து நானும் விக்டர் ஜுபுகோவும் விரிவாகப் பேச்சு நடத்தினோம். கூடங்குளத்தில் கூடுதலாக நான்கு அணுஉலைகளை அமைப்பதற்கான உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தையை இறுதி செய்துள்ளோம். அணுசக்தி பாதுகாப்பு நாடுகள் குழுவின் அனுமதியைப் பெற்ற பிறகே இத்திட்டத்தை செயல்படுத்த முடியும்." மன்மோகன் சிங்.
ரஷ்யப் பிரதமர் விக்டர் ஜுபுகோவ் பேசுகையில், இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என்றார்