'சிறப்பு பொருளாதார மண்டலத்தில் 100 விழுக்காடு முதலீடு உட்பட பல்வேறு சலுகைகள் அளிக்கப்படுவதால், ஐக்கிய அரபு நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் இந்திய நெசவுத் துறையில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளனர்' என்று மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கூறினார்.
துருக்கி, கிரேக்கம், எகிப்து, ஐக்கிய அரபு ஆகிய நான்கு நாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஷன்கேர்சின் வகேலா துபாய் பத்திரிக்கையாளர்களிடம் மேலும் கூறியதாவது:
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு சீன தயாரிப்பை விட அதிக நம்பகத்தன்மை உள்ளது. சீன நெசவு பொருட்களை இந்திய தயாரிப்பு பொருட்களுடன் எந்தவிதத்திலும் ஒப்பிட முடியாது. விலை ரீதியில் அல்லாமல் நம்பகத்தன்மையை பொருத்தவரை, இந்திய தயாரிப்புகள் உலகளவில் சிறந்த தரத்தை பெற்றுள்ளன.
நெசவு பொருட்களை ஏற்றுமதி செய்வதில் இந்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் அரபு நாடுகள் தங்களை இணைந்துகொள்ள வேண்டும்.
அரபு நாடுகளில் இந்திய நெசவு மற்றும் அதனை சார்ந்த பொருட்களுக்கு அதிக ஏற்றுமதி வாய்ப்புகள் உள்ளன. தற்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு மூன்றில் ஒரு பங்கு நெசவுப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்திய நெசவு மற்றும் பின்னலாடை பொருட்களின் ஒட்டுமொத்த ஏற்றுமதி மதிப்பான 12 பில்லியன் டாலரில், 1.068 பில்லியன் டாலர் ஐக்கிய அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
துபாய் நாட்டு தலைவர்கள், உள்நாட்டு தொழிலதிபர்கள், பிரதிநிதிகளுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தை மிகவும் பயனுடையதாக அமைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.