டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு உயர்ந்து வரும் நிலையிலும் நடப்பாண்டில் தோல் பொருட்கள் ஏற்றுமதி 12 ஆயிரம் கோடியை தாண்டும் என்று தோல் பொருட்கள் ஏற்றுமதியாளர்கள் குழுமம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு தோல், தோல் பொருட்கள் ஏற்றுமதி 2.98 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இருந்ததாகவும், இது நடப்பாண்டில் மேலும் அதிகரித்து 3.3 பில்லியன் அமெரிக்க டாலர் அல்லது ரூ.13,200 கோடியாக அதிகரிக்கும் என்று தோல் பொருட்கள் ஏற்றுமதியாளர் குழுமத்தின் தலைவர் முக்த் ராவூல் அமீன் தெரிவித்துள்ளார்.
தோல் ஏற்றுமதி டாலர் மதிப்பில் 9 விழுக்காடாக கடந்த ஆண்டில் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டில் மிதியடிகள் மட்டும் 1.21 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளதாகவும், இது நாட்டின் மொத்த தோல் பொருள் ஏற்றுமதியில் 40.65 விழுக்காடாகும்.
டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு உயர்ந்ததால் உருவான விளைவுகள் குறித்து மத்திய அரசிடம் அறிக்கை கொடுத்து உள்ளதாகவும், தோல் ஏற்றுமதிக்கு உரிய நிவாரணம் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் வலியுறுத்தப்பட்டு உள்ளதாகவும் அமீன் தெரிவித்துள்ளார்.
அரசு விரைவில் தோல் ஏற்றுமதியை ஊக்கப்படுத்தும் வகையில் சிறப்பு நிவாரணத் திட்டத்தை அறிவிக்கும் என்று நம்புவதாகவும் அமீன் கூறியுள்ளார். அயல் வர்த்தக கொள்கையில் ( 2004-09 ) வரும் 2008 -09 நிதியாண்டில் நிதி மற்றும் கொள்கை அளவிலான உதவியை இத்துறைக்கு வழங்குவது மத்திய அரசு வரும் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.