சில்லரை வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் ஈடுபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இத்துறையில் நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வணிகர்கள் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு சில்லரை வணிகர்கள் பாதுகாப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் எஸ். ரத்தினவேலு மதுரையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
மளிகை பொருட்கள், காய்கறி, பழங்கள் விற்பனை செய்வதற்கு உள்நாட்டைச் சேர்ந்த பெரிய நிறுவனங்களை தடை செய்ய வேண்டும். பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளில் மற்ற நுகர்வோர் பொருட்களை விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி வருகின்ற புதன் கிழமை (30 ந் தேதி) சென்னையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருக்க போகின்றோம்.
மளிகை மற்றும் காய்கறி, பழங்கள் வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்களை அனுமதியும், நேரடி அந்நிய முதலீட்டையும் அனுமதித்தால், இதில் தற்போது ஈடபட்டுள்ள நான்கு கோடி பேருக்கு மேல் பாதிக்கப்படுவார்கள்.
மத்திய அரசு வணிகர்களின் கோரிக்கையை பரிசீலிக்க வைக்கும் படி கேட்டுக் கொள்ள, முதலமைச்சர் கருணாநிதியை வருகின்ற 30 ந் தேதி வணிகர் சங்க பிரதிநிதிகள் சந்திக்க நேரம் கேட்டுள்ளோம்.
சிறு மற்றும் நடுத்தர வணிகர்களின் நலனை பாதுகாக்க தனி சட்டம் இயற்றப்பட வேண்டும். இதற்கென தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும்.
இந்தியா முழுவதும் 1 கோடியே 50 லட்சம் சில்லரை விற்பனை கடைகள் உள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் ஆறு லட்சம் கடைகள் உள்ளன.
தொழில் துறையில் சிறு தொழில் பிரிவின் நலனை காக்க, இந்த பிரிவுகள் மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும் என சில பொருட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதே போல் சிறு மற்றும் நடுத்தர் பிரிவு வணிகர்கள் மட்டுமே விற்பனை செய்ய் வேண்டும் என்று சட்டம் கொண்டு வர வேண்டும்.
மத்திய அரசு சில்லரை விற்பனை துறையில் ஈடுபட்டுள்ள இந்திய நிறுவனங்களுடன், அந்நிய நிறுவனங்கள் கூட்டு சேர்ந்தாலும் அந்நிய நேரடி முதலீடுக்கு அனுமதி வழங்கப்படாது என்ற ஒரே மாதிரியான சட்டத்தை கொண்டு வர வேண்டும். அத்துடன் சரக்கு போக்குவரத்து கட்டணத்தின் மீது விதிக்கப்படும் சேவை வரியையும் ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.