இந்தியா முழுவதும் தங்கு தடை இல்லாமல் பொருட்களை கொண்டு செல்ல, பொதுவான சந்தையாக உருவாக்க வேண்டும் என்று சிந்தி வர்த்தக கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.
மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திடம் சமர்பித்துள்ள மனுவில், சென்னையில் உள்ள சிந்தி வர்த்தக சங்கம் கூறியிருப்பதாவது:
இந்தியாவின் எல்லா பகுதிகளுக்கும் சரக்குகள் கொண்டு செல்வதற்கு உள்ள பல்வேறு தடைகளை நீக்க வேண்டும். இதற்கு ஏற்றார் போல் இந்தியா முழுவதையும் ஒரே சந்தையாக மாற்ற வேண்டும். எல்லா சோதனை சாவடிகளையும் நீக்க வேண்டும். சரக்குகள் கொண்டு செல்லும் போது இன்வாய்ஸ் இருந்தால் மட்டும் போதுமானது. இது தவிர பல்வேறு ஆவணங்கள் கொண்டு செல்ல வேண்டியதுள்ளது. இந்த உபரி ஆவணங்கள் கொண்டு செல்ல வேண்டும் என்ற விதியை நீக்க வேண்டும்.
ஒரு மாநிலத்தில் இருந்து, அடுத்த மாநிலத்திற்கு சரக்குகள் கொண்டு செல்ல சி படிவம் கொண்டு செல்ல வேண்டியதுள்ளது. இந்த சி படிவம் முறையை நீக்க வேண்டும்.
ம்
வருமான வரி, விற்பனை வரி போன்ற வரிகளுக்கு விதிக்கப்படும் கூடுதல் வரியை நீக்க வேண்டும்.
தற்போது மிக வேகமாக தொழில் நுட்ப வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது. இதனால் நவீன இயந்திரங்கள், தளவாடங்கள் அறிமுகமாகி வருகின்றன. இதற்கு ஏற்றார் போல் தொழில் துறைக்கு தேவையான இயந்திரங்கள் மற்றும் தளவாடங்களுக்கு தேய்மான செலவை 25 விழுக்காடாக அதிகரிக்க வேண்டும்.
பங்குதாரர்களாக இருக்கும் நிறுவனங்கள், நிறுவனமயமானதாக (கார்பரேட்) மாறுவதற்கு வசதியாக, சிறிய நிறுவனங்கள் மீது விதிக்கப்படும் நிறுவன வரியை குறைக்க வேண்டும்.
வருமான வரி படிவத்தை தாக்கல் செய்வதற்கு மீண்டும் " சாரல்" படிவத்தை கொண்டுவர வேண்டும். இதனால் தனி நபர்கள், சிறு வியாபாரிகள், மற்றவர்களின் உதவி இல்லாமல், தாங்களாகவே படிவத்தி பூர்த்தி செய்து தாக்கல் செய்ய வசதியாக இருக்கும் என்று கூறியுள்ளது.
மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பிப்ரவரியில் தாக்கல் செய்யவுள்ள நிதி நிலை அறிக்கை குறித்து பல்வேறு தரப்பினரின் கருத்தை கேட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக சிந்தி வர்ததக சங்கம், அதன் ஆலோசனைகள் அடங்கிய மனுவை அவருக்கு அனுப்பியுள்ளது.