ஹங்கேரி, இந்தியா இடையே பல்வேறு துறைகளில் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ஹங்கேரி பிரதமர் பெர்ஃனக் கியார்ஸ்கேனி, பிரதமர் மன்மோகன் சிங்குடன் நடத்திய பேச்சு வார்த்தைக்கு பின்னர் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
வேளாண் துறை, குடும்ப நலம், அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளிடையேயும் இந்த ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
ஹங்கேரியில் மருந்து உற்பத்தி, தகவல் தொழில் நுட்பம், மின்சாரம், வாகன உதிரி பாகங்கள் ஆகிய துறைகளில் பல இந்திய நிறுவனங்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இரு நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு வர்த்தகம் ஏறுமுகமாகவே உள்ளது.
கடந்த 2006 - 07 ஆம் நிதியாண்டில் இந்தியா, ஹங்கேரிக்கு 142.5 மில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. அதேப்போன்று 128.3 மில்லியன் டாலர் அளவுக்கு அங்கிருந்து இறக்குமதியும் செய்துள்ளது.
ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளில் ஹங்கேரி முக்கிய நாடு ஆகும். மேலும் அணுசக்தி உற்பத்திக்கு தேவையான மூலப் பொருட்களை விற்பனை செய்யும் நாடுகள் குழுவிலும் ஹங்கேரி இடம் பெற்றுள்ளது. விரிவுப்படுத்தப்பட்ட ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைப்பதற்கு ஹங்கேரி முழு ஆதரவளித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.