Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கரூர் ஜவுளிப் பூங்கா அடுத்த ஆண்டு துவக்கம்!

கரூர் ஜவுளிப் பூங்கா அடுத்த ஆண்டு துவக்கம்!
, புதன், 16 ஜனவரி 2008 (16:58 IST)
கரூர் அருகே அமைக்கப்பட்டு வரும் ஜவுளி பூங்கா அடுத்த ஆண்டு முதல் செயல்பட துவங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தன‌ர்.

மத்திய ஜவுளி அமைச்சகம் நாட்டின் பல பகுதிகளில் 30 ஜவுளி பூங்கா அமைக்க அனுமதி கொடுத்தது. இதில் 6 ஜவுளிப் பூங்கா தமிழ்நாட்டில் அமைக்க அனுமதி வழங்க‌ப்பட்டது. இதில் ஒன்று கரூர்-திண்டுக்கல் நெடு்ஞ்சாலையில் மணல்மேடு தாளப்பட்டி கிராமத்தின் அருகே ஒருங்கிணைக்கப்பட்ட ஜவுளி பூங்காவாக அமைக்கப்பட்டு வருகிறது. இதன் கட்டுமான பணிகள் முழு வீச்சில் நடப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஜவுளிப் பூங்காவைச் சுற்றி ரூ.1 கோடியே 20 லட்சம் செலவில் பாதுகாப்பான சுற்றுச் சுவர் கட்டப்படுகிறது. சாலைகள், மழைத் தண்ணீர் செல்வதற்கான கால்வாய்கள், சிறு பாலங்கள் ஆகியன ரூ.8 கோடியே 98 லட்சம் மதிப்பீட்டு செலவில் கட்டப்பட்டு வருகின்றன.

இந்த ஜவுளிப் பூங்கா 110 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படுகிறது. இதில் 400 நெசவு இயந்திரங்கள் அமைக்கலாம். அத்துடன் ஏற்றுமதிக்கான தரம் பிரிப்பது, சிப்பம் கட்டுவதற்கான வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன. இதை அமைப்பதற்கு மத்திய அரசு ரூ.40 கோடி ஒதுக்கியுள்ளது. தமிழக அரசு வங்கிகளுக்கான அலுவலகம், பரிசோதனை கூடம், பயிற்சி நிலையம், கண்காட்சி அரங்கு, உணவு விடுதி, மற்றும் தீயணைப்பு நிலையம் அமைக்க ஐந்து கோடி ரூபாய் வழங்கியுள்ளது.

இந்த பூங்காவில் தொழிற் சாலைகளை அமைக்கவுள்ள கரூர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த ஜவுளி தொழிலில் உள்ளவர்கள் இயந்திரம் மற்றும் தளவாட சாமான்களுக்காக ரூ.225 கோடி வரை முதலீடு செய்வார்கள் என்று எதிர்பார்‌க்கப்படுகிறது. இது முழு அளவில் இயங்கும் போது இதன் மூலம் 3 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், 40 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும்.

இந்த ஒருங்கிணைக்கப்பட்ட ஜவுளி பூங்கா செயல்பட துவங்கும் போது, கரூரில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் படுக்கை விரிப்பு, திரைச் சீலை, துண்டு ஆகியவைகளின் அளவு பல மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இங்கிருந்து வருடத்திற்கு 600 கோடி மதிப்புள்ள பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இது 2010 ஆண்டில் 10 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil