டாடாவின் நானோ அறிமுகத்தால் 65 விழுக்காடு குடும்பங்கள் சொந்தமாக கார் வாங்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்று கிரிசல் ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது.
உலகத்திலேயே குறைந்த விலைக்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நானோ என்று பெயரிடப்பட்டுள்ள காரை டெல்லியில் நடைபெற்று வரும் வாகன கண்காட்சியில் அறிமுகப்படுத்தி சாதனை படைத்து உள்ளது.
இதனால் இந்தியாவில் 65 விழுக்காடு குடும்பங்கள் சொந்தமாக கார் வைத்துக் கொள்ளும் வாய்ப்பு உண்டாகியுள்ளது. இதன் விலை எல்லா வரி மற்றும் போக்குவரத்து செலவு சேர்த்து ரூ.1 லட்சத்து 30 ஆயிரமாக இருக்கும் என்று தொழில் மற்றும் நிதித்துறையின் ஆய்வு நிறுவனமான கிரிசல் கணித்துள்ளது.
இந்த நானோ அறிமுகத்தால், இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்குபவர்களின் எண்ணிக்கை 30 விழுக்காடு அதிகரிக்கும். அடுத்த சில ஆண்டுகளில் மற்ற கார் உற்பத்தி நிறுவனங்களும், இதே போல் சிறிய கார் உற்பத்தி செய்து அறிமுகப்படுத்தும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது இந்தியாவில் 5 கோடி பேருக்கும் அதிகமாக இரண்டு சக்கர வாகனங்களை பயன்படுத்துகின்றனர். இதில் கணிசமானவர்கள் கார் வாங்கும் முயற்சியில் ஈடுபடுவார்கள். இத்துடன் இந்தியாவில் கார் விற்பனையும் 20 விழுக்காடு அதிகரிக்கும் என்று கிரிசல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.