ஏர் இந்தியா நிறுவனத்தை மேம்படுத்த அரசு முதன் முறையாக நடப்பு ஆண்டின் இரண்டாவது பாதியில் பங்குச் சந்தையின் மூலம் நிதி திரட்ட முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் ஏர் இந்தியா நிறுவனத்தில் உள்ள அரசின் பங்கு குறையும் என்று மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் பிரஃபுல் பட்டேல் தெரிவித்துள்ளார்.
நாட்டில் முதன் முறையாக வரும் அக்டோபர் மாதம் ஹைதராபாத்தில், இந்திய விமான போக்குவரத்து-2008 என்ற விமானக் கண்காட்சி நடைப்பெறவுள்ளதாக கூறியுள்ளார். அதேபோன்று இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் பங்குச் சந்தைமூலம் நிதி திரட்ட முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பங்குச் சந்தையில் நிதி திரட்டுவது தொடர்பான நடைமுறைகள் அப்போது நிலவும் சந்தையைப் பொறுத்து முடிவு செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.
ஏர் இந்தியா, இந்தியன் ஏர்லைன்ஸ் இணைப்புக்குப் பின்னர் ஏர் இந்தியா நிறுவனம் போயிங், ஏர்பஸ் ஆகிய நிறுவனங்களிடம் மொத்தம் 111 விமானங்களுக்கு வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தவிர கூடுதலாக 100 விமானங்களை வாங்கவும் ஏர் இந்தியா திட்டமிட்டு வருகிறது.விமான எரிபொருள் உலகிலேயே இந்தியாவில் தான் அதிகம் என்றும், இது தொடர்பாக நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை அடுத்த வாரம் சந்தித்து பேச உள்ளதாகவும் பிரஃபுல் பட்டேல் தெரிவித்துள்ளார்.
அந்த சந்திப்பின் போது விமான எரிபொருளுக்கான இறக்குமதி,கலால் வரியை குறைக்க வலியுறுத்த உள்ளதாகவும், அதேபோன்று மாநில அரசுகள் விமான எரிபொருள் மிதான விற்பனை வரியை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். விமானங்களைஇயக்க ஆகும் மொத்த செலவில் 35 முதல் 40 விழுக்காடு விமான எரிபொருளுக்கு செலவாவதாகவும் பிரஃபுல் பட்டேல் தெரிவித்துள்ளார்.