அனில் அம்பானி குழுமத்தைச் சேர்ந்த ரிலையன்ஸ் பவர் நிறுவனம் பொதுப் பங்குகளை வெளியிட உச்ச நீதிமன்றம் இறுதியாக அனுமதி கொடுத்துள்ளது.
இதன் படி இனி எந்த நீதி மன்றங்களிலும், ரிலையன்ஸ் பவர் பங்கு வெளியீட்டிற்கு தடை விதிக்க கோரி வழக்கு தொடுக்க முடியாது. அப்படியும் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து இடைக்கால தடை பெற்றாலும், திட்டமிட்டபடி ஜனவரி 15 ஆம் தேதி பங்குகளை வெளியிட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இந்திய பங்குச் சந்தைகளின் வரலாற்றிலேயே மற்ற எந்த பங்கு வெளியீட்டிற்கும் இல்லாத அளவு ரிலையன்ஸ் பவர் பங்கு வெளியீடு பெரிய அளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில் இதற்கு எதிர்ப்பும் உள்ளது.
அனில் அம்பானி குழுமத்தைச் சேர்ந்த ரிலையன்ஸ் பவர் நிறுவனம் பங்குகளை வெளியிட்டு ரூ.11 ஆயிரத்து 700 கோடி திரட்ட திட்டமிட்டது.
இந்த பங்குகள் வெளியிட்டால், ரிலையன்ஸ் எனர்ஜி நிறுவனத்தின் பங்குகளை வைத்திருப்பவர்களின் நலன் பாதிக்கப்படும் என குஜராத் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. குஜராத் உச்ச நீதி மன்றம் ரிலையன்ஸ் பவர் பங்கு வெளியீட்டிற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று அந்த வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரிக்க தடை விதிக்க வேண்டும் என்று ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, ரிலையன்ஸ் பவர் சார்பில், பங்கு வெளியீட்டிற்கு தடை விதிக்கப்பட்டால் பலர் பாதிக்கப்படுவார்கள். இந்த வழக்கை தொடர்ந்துள்ளவர்கள் உள் நோக்கத்துடன் தொடர்ந்துள்ளனர். குஜராத் நீதி மன்றம் வழக்கை விசாரிக்க தடை விதிக்க வேண்டும். வேறு பல நீதி மன்றங்களிலும் வழக்கு தொடர திட்டமிட்டுள்ளனல் எனவே எந்த நீதி மன்றத்திலும் இடைக்கால தடை வித்க்க கூடாது என உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், குஜராத் உச்ச நீதி மன்றம் வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்தனர்.
இதன் விசாரணை மீண்டும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் ஆர்.வி.ரவீந்திரன், ஜே.எம்.பஞ்சால் ஆகியோரைக் கொண்ட அமர்வு நீதி மன்றத்தின் முன் விசாரணைக்கு வந்தது.
இதில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், நாட்டின் எந்த நீதி மன்றமும், மற்ற எந்த அமைப்பும் தடை உத்தரவு பிறப்பித்தாலும், திட்டமிட்டபடி ஜனவரி 15 ந் தேதி ரிலையன்ஸ் பவர் பொது பங்கு வெளியிடலாம் என்று உத்தரவிட்டது.
ரிலையன்ஸ் பவர் நிறுவனம், நாட்டின் பல மாநிலங்களில் மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க போகிறது. இந்த திட்டத்தின் மூலம் 2800 மெகா வாட் மின் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக பொதுப் பங்கு வெளியீடு மூலம் முதலீடு திரட்டப்படுகிறது.