தமிழ்நாட்டில் கப்பல் தளம் கட்டுவது குறித்து முதலமைச்சர் கருணாநிதியை மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சந்தித்து பேசினார். இதையடுத்து, தமிழ்நாட்டில் கப்பல் கட்டும் தளம் ரூ.3 ஆயிரம் கோடி செலவில் உருவாக்கப்படும் என்று எல் அண்டு டி நிறுவன தலைவர் எ.எம்.நாயக் கூறினார்.
முதலமைச்சர் கருணாநிதியை சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில், மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று மாலை சந்தித்து பேசினார். அவருடன் எல் அண்டு டி நிறுவன தலைவர் எ.எம்.நாயக், கட்டுமான பணிகளின் தலைவர் கே.வி.ரெங்கசாமி ஆகியோர் உடன் இருந்தனர். இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நீடித்தது.
சந்திப்பு பின்னர் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறுகையில், எல் அண்டு டி நிறுவனம் தமிழ்நாட்டில் ஒரு கப்பல் தளத்தை அமைப்பதற்காக ஒரு திட்டம் வைத்திருக்கிறார்கள். அந்த கப்பல் தளம் அமைப்பது குறித்து முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்து பேசினாம். இந்த கப்பல் தளம் அமைவதால் தமிழ்நாட்டில் மிகப்பெரிய முதலீடு வரும். வேலைவாய்ப்பு நிறைய உருவாகும். இதை உடனடியாக பரிவுடன் கவனிப்பதாக முதலமைச்சர் கூறியிருக்கிறார். நல்ல முடிவு வரும் என்று எல் அண்டு டி நிறுவனம் நம்புகிறது. எத்தனை கோடி ரூபாய் செலவில் இந்த திட்டம் உருவாக்கப்படும் என்பது குறித்து முடிவு செய்தபின்பு அறிவிக்கப்படும்.
வெள்ள நிவாரண நிதி கேட்டு தமிழக அரசு அனுப்பிய கடிதம் எனக்கு இன்னும் வந்துசேரவில்லை. ஒருவேளை அந்த கடிதம் உள்துறைக்கு சென்று இருக்கலாம். சிமெண்ட் விலையை பொறுத்தவரையில் வினியோக தட்டுப்பாடு இருப்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
சிமெண்ட் வினியோக தட்டுப்பாட்டை காரணம் காட்டி தாறு, மாறாக விலையை உயர்த்துவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். சிமெண்ட் நிறுவனங்கள் குழுக்களாக செயல்படுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது. சிமெண்ட் விலையை குறைக்க மறுப்பவர்கள் மக்களையும் நாட்டு நலனையும் மதிக்காதவர்கள் என்றுதான் முடிவுக்கு வரமுடியும் என்று சிதம்பரம் கூறினார்.
பின்னர் எல் அண்டு டி நிறுவன தலைவர் எ.எம்.நாயக் கூறுகையில், தமிழ்நாட்டில் கப்பல் கட்டும் தளம் ரூ.3 ஆயிரம் கோடி செலவில் உருவாக்கப்படும் என்றார்.