ஹோன்டா மோட்டார் சைக்கிள் நிறுவனம் உற்பத்தியை அதிகரிக்கவும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காகவும் ரூ.300 கோடி முதலீடு செய்ய உள்ளது.
இந்தியாவில் இருசக்கர வாகனத்தை உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஹோன்டா மோட்டார் சைக்கிள் அண்ட் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் தொழிற்சாலை ஹரியான மாநிலத்தில் மனிஷர் என்ற இடத்தில் அமைந்துள்ளது.
இந்நிறுவனம் இங்கு இருசக்கர வாகன உற்பத்தியை அதிகரிக்கவும், புதிய ரக வாகனங்களை தயாரிப்பதற்காக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக அடுத்த முன்று வருடங்களில் ரூ.300 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
இது குறித்து இந்நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் சின்ஜி அயோமா கூறுகையில், இந்த முதலீடு தொழிற்சாலையை நவீன படுத்தவும், புதிய வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காகவும் பயன்படுத்திக் கொள்ளப்படும். நாங்கள் நான்கு அல்லது ஐந்து புதிய ரக இரண்டு சக்கர வாகனங்களை அறிமுகப்படுத்த போகின்றோம். தற்போது வருடத்திற்கு 10 லட்சம் வாகனங்கள் உற்பத்தி செய்கின்றோம். இதை 12 லட்சமாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். அடுத்த மாதம் நடைபெற உள்ள ஆட்டோ எக்போ வர்த்தக கண்காட்சியில் நவீன ரக ஸ்கூட்டரை அறிமுக்பபடுத்த போகின்றோம். அடுத்த வருடம் புதிய மோட்டர் சைக்கிள் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
இந்த ஆண்டு இரு சக்கர வாகனங்களி்ன் விற்பனை மந்தமாக இருக்கின்றது. ஆனால் எங்கள் விற்பனை பாதிக்கப்பட்டு இருக்காது பெரு நகரங்களில் போக்கு வரத்து நெருக்கடி அதிகரித்து வருகிறது. இந்த நகரங்களில் தானியங்கி கியர் அமைப்பு உள்ள ஸ்கூட்டர்களுக்கு விற்பனை வாய்ப்பு அதிகரித்து வருகிறது.
நாங்கள் அடுத்த நிதி ஆண்டில் பத்து இலட்சம் இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்ய திட்டமிட்டுளேளோம். இதில் ஏழு லட்சம் ஸ்கூட்டரும், மூன்று லட்சம் மோட்டார் பைக்குகள் விற்பனையாகும் என எதிர்பார்க்கின்றோம்.
இந்த நிதி ஆண்டில் 6 லட்சத்து 10 ஆயிரம் ஸ்கூட்டர்களையும், 2 லட்சத்து 70 ஆயிரம் மோட்டார் பைக்குகளையும் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கின்றோம் என்று அயோமா தெரிவித்தார்.
இந்த ஆண்டு இரு சக்கர வாகனங்களின் விற்பனை குறைந்துள்ளது. கடநத ஐந்து ஆண்டுகளை விட, இந்த வருடம் வட்டி விகிதம் அதிகரித்தது. இதன் பாதிப்பால் இந்த நிதியாண்டின் நவம்பர் மாதம் வரையிலான எட்டு மாதத்தில் ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள் போன்ற இரண்டு சக்கர வாகனங்களின் விற்பனை 12.3 விழுக்காடு குறைந்துள்ளது (சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில்) என இந்திய வாகன உற்பத்தியாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.