துபாயில் இன்று துவங்கும் இந்திய நகை வர்த்தக கண்காட்சியில் பாரம்பரிய நகைகள் இடம் பெறுகின்றன.
துபாய் சுற்றுலா வர்த்தக துறையின் ஆதரவுடன் மதினாத் ஜூமிரியா என்ற நகரில் இந்திய நகைகள் வர்த்தக கண்காட்சி துவங்கியவுள்ளது. இது இன்றிலிருந்து நான்கு நாட்கள் நடைபெறும். இதில் சுமார் 200 மில்லியன் டாலர் மதிப்புள்ள நகைகள் கண்காட்சிக்கு வைக்கப்படுகின்றன.
இதில் இடம் பெறும் இந்தியாவின் பராம்பரிய கலை நயம் மிக்க நகைகள் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துபாயில் அதிகளவு இந்தியர்கள் இருப்பதால், இதில் அதிகளவு வர்த்தகம் நடக்கும் என்று இதன் அமைப்பாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
17 வது நூற்றாண்டு முதல் 20ம் நூற்றாண்டு வரை உள்ள காலத்தை சேர்ந்த இந்திய பாரம்பரிய நகைகளை துபாயைச் சேர்ந்த சமினா என்ற நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனம் இந்திய அரசர்கள், அரசிகள் விதவிதமான நகைகளை அணிந்து காட்சி அளிக்கும் புகைப்படங்களையும், ஓவியங்களையும் கண்காட்சியில் வைக்கிறது.
சமினா நிறுவனத்தை சேர்ந்த சமினா கன்யாரி கூறுகையில் இந்தியாவின் பழைமையான கலை பொருட்கள், ஓவியங்கள், அலங்கார பொருட்கள், மதம் சம்பந்தப்பட்ட பொருட்கள், நகைகள் மீது எப்போதுமே எல்லோருக்கும் ஒரு வித ஈர்ப்பு உள்ளது. தற்காலத்திய இந்திய ஒவியங்கள் அதிக கவனத்தை ஈர்க்கின்றது. இருப்பினும் சர்வதேச அளவில் வரவேற்பை பெறும் கலைப் படைப்புகளாக இன்றளவும் இந்தியாவின் பழமை வாய்ந்த கலைப் பொருட்கள் உள்ளன என்று கூறினார்.
இந்த கண்காட்சியில் லண்டனைச் சேர்ந்த சுசன் ஒலிமன்ஸ் ஓரியன்டல் ஆர்ட் என்ற நிறுவனமும் பங்கேற்கிறது. இது முகலாய மன்னர்கள் பயன்படுத்திய வைரக்கற்கள் பதித்த பெட்டிகள், தங்கத்தினால் செய்த பெட்டிகள், விலையுயர்ந்த கற்கள், முத்து பதித்த வெண் சாமரம், செங்கோல் மற்றும் பல்வேறு நகைகளை காட்சிக்கு வைக்க போகிறது என்று இதன் அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.