பொதுமக்கள் மத்தியில் மட்டுமல்லாமல், வாகன உற்பத்தியாளர்களும் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த ரூ.1 லட்சம் விலையில் கார் விற்பனைக்கு வர உள்ளது.
இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சேர்மன் ரத்தன் டாடா, ரூ.1 லட்சம் விலையில் கார் தயாரித்து விற்பனை செய்யப்போவதாக சில ஆண்டுகள் முன்பு அறிவித்தார். இந்த அறிவிப்பு பல மட்டங்களிலும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. சிலர் இது சாத்தியம் இல்லை என்று கருத்து தெரிவித்தனர்.
பெரும் ஏதிர்பார்ப்பை ஏற்படுத்திய டாடா மோட்டார்ஸின் ரூ.1 லட்சம் கார் அடுத்த ஜனவரி மாதம் டில்லியில் நடைபெறவுள்ள "ஆட்டோ எக்ஸ்போ 2008" வர்த்தக கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த கார் உற்பத்தி செய்யப்பட்டுவிட்டது. இப்போது இந்நிறுவனத்தின் பூனா தொழிற்சாலையில் சோதிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், எங்கள் நிறுவனம் புதிதாக எந்த வாகனத்தை உற்பத்தி செய்தாலும் ஆட்டோ வர்த்தக கண்காட்சியில் அறிமுகப்படுத்தும். இந்த முறையை பின்பற்றி ரூ.1 லட்சம் விலையில் உள்ள மக்கள் காரை ஜனவரி 10ந் தேதி ஆட்டோ எக்ஸ்போவில் சிறப்பு நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்த உள்ளது. இது அடுத்த ஆண்டின் இறுதியில் விற்பனைக்கு வரும் என்று தெரிவித்துள்ளது.