இந்தியாவுக்கும் ரஷியாவுக்கும் இடையே வர்த்தகம் குறைவாக இருப்பதற்கு அதிகாரிகளே காரணம் என்று ரஷிய துணைத் தூதர் குற்றம் சாட்டினார்.
கொல்கத்தாவில் மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இன்ஜினியரியங் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தில் ரஷியாவுடன் வர்த்தகம் என்ற தலைப்பில் கருத்தரங்கை நடத்தியது.
இதில் கொல்கத்தாவில் உள்ள ரஷிய தூதரகத்தின் துணைத் தூதர் விளதிமீர் வி.லாஜ்ரவ் உரையாற்றினார்.
அப்போது அவர், ரஷியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே குறைந்த அளவில் வர்த்தகம் நடப்பது இருநாடுகளின் உறவில் பலவீனமான அம்சமாகும். இரு நாடுகளிலும் உள்ள அதிகார வர்கத்தி்ன் தலையீடு எல்லா மட்டங்களிலும் இருக்கின்றது. வர்த்தகம் அதிகரிக்காமல் இருப்பதற்கு காரணம் அதிகார வர்கத்தின் சிவப்பு நாடா நடைமுறை தான் என்று குற்றம் சாட்டினார்.
தற்போது ரஷியாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே ராணுவ ஒத்துழைப்பு, அரசு மட்டத்திலான தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஆகியவற்றை சேர்க்காமல், இருதரப்பு வர்த்தகம் 400 கோடி டாலராக உள்ளது.
அதே நேரத்தில் ரஷியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகம் இதை விட பத்து மடங்காக 4 ஆயிரம் கோடி டாலராக உள்ளது.
ரஷியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தகம் அதிகரிக்காமல் இருப்பதற்கு, இந்திய அரசு ரஷியாவைச் சேர்ந்த வர்த்தகர்கள் பலமுறை இந்தியாவுக்கு வந்து செல்வதற்கான விசாவை கொடுக்க தயங்குவதும் ஒரு காரணம்.
இந்தியாவில் மும்பையில் இருந்து பந்தார் அப்பாஸ், டெக்ரான் வழியாக செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரத்திற்கு புதிய வர்த்தக மார்கத்தை திறந்து விட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய வழித் தடத்தினால் போக்குவரத்து காலம் 10 முதல் 12 நாட்கள் குறையும். அத்துடன் போக்குவரத்து செலவும் 15 விழுக்காடு குறையும். இதனால் இரு தரப்பு வர்த்தகம் அடுத்த மூன்று வருடங்களில் 100 கோடி டாலராக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.
இந்த கருத்தரங்கு செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் அடுத்த வருடம் மார்ச் 11 முதல் 14 வரை நடைபெறவுள்ள இண்டி (இந்தியா) தொழில்நுட்ப வர்த்தக கண்காட்சி நடைபெறுவதை ஒட்டி நடத்தப்பட்டது.
இந்த வர்த்தக கண்காட்சியை இன்ஜினியரிங் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.