டாலரின் மதிப்பு சரிவால் பாதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதியாளர்களின் நெருக்கடி தீர்வதற்கு மாநில அரசுகள் வரிகளை திரும்ப கொடுக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கேட்டுக் கொண்டார்.
நேற்று டெல்லியில் நடந்த 54 வது தேசிய வளர்ச்சிக் குழு கூட்டத்தில் ப.சிதம்பரம் உரையாற்றும் போது, தற்போது மாநில அரசுகள் ஏற்றுமதியாளர்களிடம் இருந்து மதிப்பு கூட்டு வரி, ஆக்ட்ராய், மின்சார கூடுதல் வரி ஆகியவற்றை வசூலிக்கின்றது. இதை மாநில அரசுகள் ஏற்றுமதியாளர்களுக்கு திருப்பி கொடுக்க வேண்டும். இலையெனில் சலுகை வழங்க வேண்டும். இதை மாநில அரசுகள் கவனமாக பரிசீல்க்கும்படி கேட்டுக் கொள்கின்றேன்.
மாநில அரசுகள் ஏற்றுமதியாளர்களின் வரிச் சுமைகளை குறைத்தால், அந்த மாநிலங்களில் அதிக ஏற்றுமதி தொழில்களை தொடங்கும் வாய்ப்பை பெறலாம். எனவே நீண்ட கால நன்மையை கருதி மாநில அரசுகள் ஏற்றுமதியாளர்களுக்கு வரியை திருப்பி கொடுக்க வேண்டும் அல்லது சலுகைகள் வழங்க வேண்டும். இப்போது இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு குறைந்து வருவதால், ஏற்றுமதியாளர்கள் கடும் நெருக்கடியில் உள்ளனர். மத்திய அரசு ஏற்கனவே பல சலுகைகளை அளித்துள்ளது. இது அவர்களின் சுமையை சிறிது குறைத்திருக்கும் என்று கருதுகின்றேன்.
வரிகள் ஏற்றுமதி செய்ய முடியாது என்பது உலகம் முழுவதும் ஏற்றுக் கொண்ட நடைமுறை. இதனால் தான் மத்திய அரசு ஏற்றுமதியாளர்கள் செலுத்திய வரியை மத்திய அரசு திருப்பி கொடுக்கின்றது அல்லது வரி செலுத்துவதில் இருந்து சலுகை வழங்குகின்றது. இதை மாநில அரசுகளும் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன் என்று கூறினார்.
கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து அந்நியச் செலவாணி சந்தையில் இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு 15 விழுக்காடு குறைந்துள்ளது.
இதை ஈடுகட்ட மத்திய அரசு ஏற்கனவே ஏற்றுமதியாளர்களுக்கு மூன்று முறை பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. இதன் படி ரூ.5,200 கோடி மதிப்பிற்கு சலுகைகளை வழங்கியுள்ளது.
ஆனால் ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கிய இந்த சலுகைகள் போதாது. மேலும் சலுகைகளை வழங்க வேண்டும் என்று மத்திய வர்த்தக அமைச்சகம், நிதி அமைச்சகத்தை கேட்டு வருகிறது.