துணி மற்றும் ஆயத்த ஆடை துறையை மத்திய, மாநில அரசு காப்பாற்ற வேண்டும் என்று ஈரோடு துணி மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்க செயலாளர் சிவானந்தன் கூறினார்.
இது குறித்து அவர் கூறியது, அரசின் சுற்றறிக்கையின் படி 22 சதவீதம் ஏற்றுமதி சென்ற ஆண்டை விட குறைந்துள்ளது. இதே நிலைமை நீடிக்குமானால் ஆயத்த ஆடை, ஜவுளித் துறையை நம்பியுள்ள தொழிலதிபர்களும், தொழிலாளர்களும் மிகவும் பாதிக்கப்படுவர். டாலர் நாணயத்தின் வீழ்ச்சியும், இந்திய ரூபாயின் எழுச்சியும் இந்தியப் பொருளாதாரத்து ஏற்றம் தருவதேயானாலும், ஏற்றுமதியாளர்கள் ஆறு மாத காலமாக வேதனையை அனுபவித்து வருகின்றனர்.
மூன்று மாதங்களுக்கு முன் ஆயிரத்து 400 கோடி அளவுக்கு நிவாரணம் அளித்த நிதி அமைச்சர், ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்களின் கோரிக்கையை ஏற்று மேலும் சில சலுகைகள் அறிவித்துள்ளார்.
வங்கி வட்டி விகிதத்தை 2 சதவீதம் குறைத்தும், சில சேவைகளுக்கு சேவை வரியில் இருந்து விலக்கு அளித்தும் பாலீஸ்டர் மற்றும் மேன் மேட் பிப்பர் போன்ற மூலப் பொருள் இறக்குமதிக்கு வரி இறக்கம் செய்தும் அறிவித்துள்ளார்.
இது போதுமானதல்ல, நிரந்தர தீர்வுமாகாது. 'டூட்டி டிரா பேக்' எனப்படும் ஊக்கத்தொகையை டாலரின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப கூட்டி, விகிதாச்சாரத்தை குறைத்தும் கொடுக்க வேண்டும்.
அல்லது ஜவுளி, ஆயத்த ஆடை ஏற்றுமதிக்கு ஆறு மாத காலத்துக்கு டாலர் விலையை ரூ. 41 என நிர்ணயம் செய்ய வேண்டும். சேவை வரி மற்றும் பி.பி.டி., எனப்படும் கேளிக்கை வரியில் இருந்து முற்றிலும் விலக்கு அளிக்க வேண்டும். வங்கி வட்டி வகிதத்தை நான்கு சதவீதம் என மற்ற நாடுகளில் உள்ளது போல் குறைத்துக் கொடுக்க வேண்டும். மாநில அரசும் பெண் தொழிலாளர்கள் நிறைந்த இந்தத் துறைக்கு மின்சாரக் கட்டணத்தை இரண்டு ரூபாயாகக் குறைத்து கொடுக்க வேண்டும்.
நாளுக்கு நாள் கடும் போட்டியை எதிர் நோக்கியுள்ள, 70 சதவீத விழுக்காடு ஏழைப் பெண் தொழிலாளர்களைக் கொண்ட ஜவுளி மற்றும் ஏற்றுமதித் துறையைக் காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.