அரிசி, கோதுமை, உளுந்து ஆகியவைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள முன்பேர வர்த்தக தடையை நீக்க வேண்டும் என்று முன்பேர வர்த்தக சந்தை குழு கூறியுள்ளது.
அரிசி, கோதுமை, உளுந்து ஆகிய அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை செயற்கையாக உயர்கிறது. இதற்கு காரணம் இந்த பண்டங்களின் மீது நடத்தப்படும் முன் பேர வர்த்தகம்தான். இத்துடன் இவற்றின் விலை அதிகரிப்பால் பணவீக்கமும் உயர்கிறது என்று கூறி சென்ற வருடம் மத்திய அரசு முன் பேர வர்த்தகத்திற்கு தடை விதித்தது.
இந்த தடையை மத்திய நுகர்வோர் அமைச்சகம் நீக்க வேண்டும் என்று முன்பேர வர்த்தக சந்தை குழுவின் தலைவர் பி.சி.கட்டாவ் கூறியுள்ளார்.
நேற்று கொல்கத்தாவில் இந்திய பண்டக முன்பேர சந்தையின் இரண்டாவது தேசிய மாநாடு துவங்கியது.
அப்போது செய்தியாளர்களிடம் முன்பேர வர்த்தக சந்தை குழுவின் தலைவர் பி.சி.கட்டாவ் கூறியதாவது, மத்திய நுகர்வோர் அமைச்சகம் அரிசி, கோதுமை, உளுந்து ஆகியவைகளுக்கு விதித்துள்ள முன்பேர வர்த்தக தடையை நீக்க வேண்டும்.
இந்தியாவில் முன்பேர வர்த்தக சந்தை முக்கியமான காலகட்டத்தில் உள்ளது. இதில் பண்டகங்களின் வர்த்தகத்தில் நேரடியாக ஈடுபட்டுள்ள வியாபாரிகளும் கலந்து கொள்வதற்கு தகுந்தாற்போல் மாற்றம் செய்வது அவசியம்.
இதற்கான பரிந்துரை கூடிய விரைவில் சம்பந்தப்பட்ட அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். விலைவாசி அதிகரிப்பதற்கு முன் பேர வர்த்தகம் காரணம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
பங்குச் சந்தை, கடன் பத்திரம், சந்தை ஆகியவற்றுடன் ஒப்பிட்டால் முன் பேர வர்த்தக சந்தையில் குறைந்த அளவிற்கே விலைகளில் மாற்றம் இருக்கிறது.
இதில் வங்கிகள், நிதி நிறுவனங்கள், தொழில் வர்த்தக நிறுவனங்கள் ஆகியவையும் பங்கு பெற வேண்டும். இதில் நேரடி அந்நிய முதலீட்டையும் அனுமதிக்க வேண்டும். நாங்கள் விவசாயிகளும் முன் பேர வர்த்தக சந்தையில் பங்கு பெறுவதை ஊக்குவிக்கின்றோம் என்று தெரிவித்தார்.