Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பருத்தி இறக்குமதி தீர்வையை குறைக்க வேண்டும்: சைமா!

பருத்தி இறக்குமதி தீர்வையை குறைக்க வேண்டும்: சைமா!
, வெள்ளி, 7 டிசம்பர் 2007 (16:05 IST)
ஜவுளித் துறைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை தீர்க்க பருத்தி மீதான இறக்குமதி தீர்வை, கடன் திருப்பி செலுத்துவது தள்ளிவைக்க வேண்டும் என்று சைமா கேட்டுக் கொண்டுள்ளது.

இது குறித்து சைமா என சுருக்கமாக அழைக்கப்படும் தென் இந்திய ஜவுளி ஆலை அதிபர்கள் சங்க தலைவர் டாக்டர் கே.வி ஸ்ரீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“மத்திய அரசு ஜவுளித் துறைக்கு அறிவித்துள்ள செயற்கை இழை இறக்குமதி தீர்வை குறைப்பு, ஏற்றுமதிக்கான கடன் சலுகை போன்றவை போதுமானதாக இல்லை. இவைகளினால் இந்த துறைக்கு மிக குறைந்த அளவு பயனே கிடைக்கும்.
சீனாவில் இருந்து குறைந்த விலையில் செயற்கை இழை நூல்கள் இறக்குமதி ஆகின்றன. இதனால் உள்நாட்டு செயற்கை இழை நூற்பாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இறக்குமதி செய்யப்படும் செயகை இழைக்கு இறக்குமதி வரியை 5 விழுக்காடு குறைத்திருப்பது தவறான நடவடிக்கையாகும்.

உள்நாட்டு செயற்கை இழை மீது விதிக்கப்படும் வரியை முழுவதும் நீக்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் செயற்கை இழை மீது குவிப்பு வரியை விதிக்க வேண்டும் என ஜவுளித் துறையினர் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசு இதன் இறக்குமதி வரியை குறைத்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

உள்நாட்டு ஜவுளித் துறையை பாதுகாக்க அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது வருத்தமளிக்கின்றது. தற்போது தொழில் பாதிப்பால் நூல்களின் கையிருப்பு இருமடங்காக உயர்ந்துள்ளது. பல ஆலைகள் உற்பத்தி திறனை 20 விழுக்காடு வரை குறைத்துள்ளன. பருத்தியின் விலை அதிகரித்துள்ளதால் ஜவுளி ஆலைகளுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. இத்துடன் தமிழகத்தில் தற்போது மின் வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இது நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளது.

இந்த பிரச்சனைகளை தீர்க்க மத்திய அரசு ஏற்றுமதி செய்யப்படும் பருத்திக்கு வழங்கும் 1 விழுக்காடு ஊக்கத் தொகையை ரத்து செய்ய வேண்டும். பருத்தி இறக்குமதி வரியை தற்போதுள்ள 10 விழுக்காட்டில் இருந்து 5 விழுக்காடாக குறைக்க வேண்டும். மத்திய விற்பனை வரியை நீக்க வேண்டும” என்று அறிக்கையில் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil