Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாகிஸ்தானுக்கு காய்கறி ஏற்றுமதி மூன்று மடங்கு அதிகரிப்பு!

பாகிஸ்தானுக்கு காய்கறி ஏற்றுமதி மூன்று மடங்கு அதிகரிப்பு!
, திங்கள், 3 டிசம்பர் 2007 (17:01 IST)
பாகிஸ்தானுக்கு இந்தியாவிலிருந்து காய்கறிகள் ஏற்றுமதி செய்வது மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு செய்யப்படும் உலர் பழங்களின் ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு வாகா எல்லை ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்பு இரு புறமும் எல்லையின் நுழைவு வாயிலில் இருந்து 1 கிலோ முன்பு சரக்கு லாரிகள் நிறுத்தப்பட்டுவிடும். லாரியில் உள்ள சரக்குகளை தலைச்சுமையாக அடுத்த பகுதிக்கு கொண்டு சேர்த்தனர். இதனால் கால விரையம் ஏற்பட்டதுடன், செலவும் அதிகரித்தது.

கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து நேரடியாக சரக்கு லாரிகள் எல்லைக்குள் அனுமதிக்கப்படுகின்றன. இதுவே காய்கறி ஏற்றுமதி அதிகரித்து இருப்பதற்கு முக்கிய காரணம்.

இந்த செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், அக்டோபர் மாதம் காய்கறி ஏற்றுமதி மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.
அக்டோபர் மாதத்தில் 14,717 டன் காய்கறிகள் வாகா எல்லை வழியாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ.19 கோடியே 12 லட்சம். நவம்பர் மாதம் 1 ந் தேதி முதல் 15 ந் தேதி வரை 6,422 டன் காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ.7 கோடியே 99 லட்சம்.

வாகா எல்லையில் சரக்கு லாரிகள் அனுமதிக்கப்படாத செப்டம்பர் மாதத்தில் ரு.5 கோடியே 46 லட்சம் மதிப்பிற்கு, 4,249 டன் காய்கறிகள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டன.

இதே போல் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உலர் பழங்களின் அளவும் அதிகரித்துள்ளது. சென்ற அக்டோபர் மாதத்தில் 237 லாரிகளில் சுமார் 3,135 டன் உலர் பழங்களும், பசுமையான பழங்களும் லாரிகளில் வாகா எல்லை வழியாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ.46 கோடி.
நவம்பர் மாதம் 1 முதல் 15 ந் தேதி வரை 142 லாரிகளில் 1,636 டன் உலர் பழங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ.24 கோடியே 61 லட்சம்.

செப்டம்பர் மாதத்தில் சுமார் 2,359 உலர் பழங்களும், பசுமையான பழங்களும் இறக்குமதி செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.37 கோடியே 39 ஆயிரம்.

அதே நேரத்தில் இறைச்சி ஏற்றுமதி குறைந்து விட்டது. செப்டம்பர் மாதத்தில் 67 லாரிகளில் ரூ.5 கோடியே 82 லட்சம் மதிப்புள்ள 868 டன் இறைச்சி ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்தது. இது அக்டோபர் மாதத்தில் 565 டன்னாக குறைந்து விட்டது.

இது குறித்து அமிர்தரசலில் உள்ள சுங்க இலாக துணை ஆணையாளர் சஞ்சய் சரன் கூறுகையில், சரக்கு லாரிகள் எல்லைக்குள் அனுமதிக்கப்பட்டு உள்ளதால், இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் பல மடங்கு உயரும். வர்த்தகத்தை அதிகரிப்பதற்காக பாகிஸ்தான் சுங்க இலாக அதிகாரிகளுடனான அடுத்த கூட்டத்தில், அவர்களிடம் பல்வேறு ஆலோசனைகளை தெரிவிக்க உள்ளோம் என்று கூறினார்.

பஞ்சாப் மாநில தகவல் மற்றும் செய்தித் துறை அமைச்சர் பிக்ராம் சிங் மஜிதியா கூறுகையில், சரக்கு லாரிகள் போக்குவரத்துக்காக தனியான பாதையை இரு நாடுகளும் திறக்க வேண்டும். இதனால் எல்லை சாவடி வழியாக செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். வாகா எல்லை அருகே ஏற்றுமதி-இறக்குமதி சரக்கு முனையம் அமைப்பதற்கான ஆலோசனை முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

இரு நாடுகளுக்கும் இடையே அட்டாரி, வாகா எல்லை வழியாக சரக்கு போக்குவரத்து துவக்கப்பட்டது. பஞ்சாப் வர்த்தகர்களுக்கு இலாபகரமானதாக இருக்கிறது. இதற்கு முன் மும்பையில் இருந்து கராச்சி துறைமுகத்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இதனால் செலவு அதிகமானதுடன், காலதாமமும் ஏற்பட்டது.
இரு நாடுகளுக்கும் இடையேயிலான (1947 ஆம் ஆண்டு) பிரிவினைக்கு பிறகு, இப்போதுதான் முதன் முறையாக சரக்குகளை லாரிகள் மூலம் ஏற்றுமதி இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil