உத்திரப் பிரதேசத்தில் வாட் வரி அமல்படுத்துவதை எதிர்த்து வியாபாரிகள் சங்கம் 50 மணி நேர கடை அடைப்பு நடத்துகிறது. இந்த கடை அடைப்பு நாளை முதல் நடைபெறுகிறது.
உத்தர பிரதேச மாநில அரசு டிசம்பர் 1 ஆம் தேதி முதல் வாட் வரி என சுருக்கமாக அழைக்கப்படும் மதிப்பு கூட்டு வரியை அமல்படுத்த முடிவு செய்துள்ளது.
இதை எதிர்த்து சமாஜ்வாடி கட்சியின் உத்தர பிரதேச வியாபாரிகள் சங்கம் பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு பாரதிய ஜனதா கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்த சங்கத்தின் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான பன்வாரி லால் கன்சால் கூறும்போது, தற்போதுள்ள நிலையிலேயே வாட் வரி முறையை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த வாட் வரி விதிப்பு முறை வியாபாரிகளுக்கு எதிரானதாக உள்ளது. உத்திர பிரதேச மாநில அரசு வருடத்திற்கு ரூ.15 லட்சத்திற்கும் அதிகமாக வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு மட்டுமே வாட் வரியை அமல்படுத்த வேண்டும். இப்போது அரசு வருடத்திற்கு ரூ.5 லட்சம் வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கும் வாட் வரியை அமல்படுத்த முயற்சி செய்கிறது.
இந்த புதிய முறையால் லஞ்சம் அதிகரிக்கும். வியாபாரிகள் துன்புறுத்தப்படுவார்கள். அதே நேரத்தில் அரசின் வருவாயும் குறையும். ஆனால் மக்கள் அதிக விலை கொடுத்து பொருட்களை வாங்க வேண்டியதிருக்கும் என்று கூறினார்.
இன்று வாட் வரியை எதிர்த்து தலைநகர் லக்னோவில் பேரணி நடத்த வியாபாரிகள் பல்வேறு வாகனங்களில் வந்தனர். ஆனால் அரசு பேரணிக்கு அனுமதி கொடுக்கவில்லை.
வியாபாரிகள் சங்க செய்தி தொடர்பாளர் சந்திரகுமார் சப்ரா கூறும்போது, இந்த பிரச்சனையில் அரசுடன் மோத வியாபாரிகள் தயாராக உள்ளனர். எதாவது அசாம்பாவிதம் நடந்தால் அதற்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைமையில் உள்ள அரசே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். இன்று மாலை பந்திற்கு ஆதரவு தெரிவித்து வியாபாரிகள் தீவட்டி ஊர்வலம் நடத்துவார்கள் என்று கூறினார்.
அதே நேரத்தில் பாரதிய ஜனதா கட்சி வாட் வரியை அமல்படுத்துவதற்கு முன்பு முதல்வர் மாயாவதி வியாபாரிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கருத்துக்களை கேட்டு அறிந்து கொள்ள வேண்டும் என்று உள்ளது.
இதன் கோராக்பூர் தொகுதி ம்ககளவை உறுப்பினர் அதித்தாய நாத், வாட் வரியை அமல்படுத்துவதற்கு வியாபாரிகளின் கருத்துக்களை முதல்வர் கேட்டறிந்து அவர்களுடன் உடன்பாடு காண வேண்டும். நிர்ப்பந்தமாக வாட் வரியை அமல்படுத்துவதால் அதிகாரிகளின் ராஜ்ஜியமே நடைபெறும். இந்த வரி வியாபாரிகளை மட்டும் பாதிக்காது. பொது மக்களு்ம் அத்தியாவசிய பொருட்களுக்கு அதிக விலை கொடுக்க வேண்டியதிருக்கும் என்று கூறினார்.
இந்த சங்கம் ஏற்கனவே கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி தேதி அன்று வாட் வரியை எதிர்த்து ஒரு நாள் பந்த் நடத்தியுள்ளது.
அத்துடன் இந்த வியாபாரிகள் சங்க தலைவரும், மக்களவை உறுப்பினருமான பன்வாரி லால் தலைமையில் வியாபாரிகள் திரண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதி தேதி ரிலையன்ஸ் ப்ரஷ் காய்கறி கணி அங்காடிக்கு எதிராக லக்னோ, வாரணாசி ஆகிய இரண்டு நகரங்களிலும் போராட்டம் நடத்தினர். இதனால் கலவரம் உண்டானது. இதை காரணம் காட்டி மாயாவதி அரசு உத்தர பிரதேசத்தில் உள்ள ரிலையன்ஸ் ப்ரஸ் கடைகளை மூடும் படி உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.