பாரத ஸ்டேட் வங்கி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் பங்கு மூலதனத்தை மேலும் 16 ஆயிரம் கோடி அதிகரிக்க போகிறது.
இதை இந்திய ஹாக்கி அணி ஆசிய கோப்பையை வென்றதற்காக ரூ.1 கோடி பரிசு வழங்கும் விழாவின் போது பாரத ஸ்டேட் வங்கி குழுமத்தின் சேர்மன் ஓம் பிரகாஷ் பத் செய்தியாளர்களிடம் பேசும் போது கூறியதாவது:
பாரத ஸ்டேட் வங்கியின் பங்கு மூலதனம் மேலும் ரூ.16 ஆயிரம் கோடி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் அதிகரிக்கப்படும். மத்திய அரசு தனது பங்கு மூலதனமாக ரூ.10 ஆயிரம் கோடி வழங்கும் படி கேட்டுக் கொண்டுள்ளோம். இதன் பதிலை எதிர்பார்த்துக் கொண்டுள்ளோம். மத்திய அரசு தனது பங்கை செலுத்திய பிறகு உரிமை பங்கு வெளியிட்டு ரூ.6 ஆயிரம் கோடி திரட்டப்படும்.
பாரத ஸ்டேட் வங்கியின் பங்கு மூலதனம் கடந்த பத்து ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை. இதனால் தான் மத்திய அரசிடம் பங்கு மூலதனமாக 10 ஆயிரம் கோடி கொடுக்கும் படி கேட்டுள்ளோம். இது விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றோம்.
உரிமைப் பங்குகள் அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்படும். அடுத்த ஆறு மாதத்திற்து வங்கி வட்டி விகிதங்கள் மாறக் கூடிய வாய்ப்பு இல்லை. ஸ்டேட் வங்கி எல்லா துறையிலும் வளர்ச்சி அடைந்து வருகிறது. வைப்பு நிதி 61 விழுக்காடு அதிகரித்துள்ளது. கடன் வழங்குவது 11 விழுக்காடு அதிகரித்துள்ளது. இந்தியாவில் வங்கி வசதிகள் இல்லாத 1 லட்சம் கிராமங்களில் வங்கி வசதிகளை பாரத ஸ்டேட் வங்கி ஏற்படுத்தி உள்ளது. இந்த அளவு மற்ற எந்த வங்கிக்கும் கிளைகள் இல்லை.
ஸ்டேட் வங்கியின் துணை அமைப்புகளான, வங்கி சேவை அல்லாத நிதி சேவையில் ஈடுபட்டுள்ள ஆறு நிறுவனங்களையும் இந்த வங்கியுடன் இணைப்பதற்கு ரிசர்வ் வங்கியின் அனுமதியை எதிர்பார்த்து உள்ளோம். இந்த பிரச்சனையில் இறுதி முடிவு எடுப்பதற்கு முன்பு, இதன் ஊழியர்களின் எதிர்பார்ப்பு உட்பட எல்லா விஷயங்களும் பரிசீலித்து முடிவு எடுப்போம் என்று பத் கூறினார்.