மின் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்று ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரூபாய்க்கு எதிரான டாலர் விலைவீழ்ச்சியால் ஏற்றுமதி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், ஆயத்த ஆடை தயாரிப்பு, விசைத்தறி நிறுவனங்களுக்கான மின்கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்று ஆயத்த ஆடை, விசைத்தறி ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
ஆயத்த ஆடை தயாரிப்பு, விசைத்தறி நிறுவனங்களுக்கான மின்கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரு.6.10 வீதம் வணிக அடிப்படையில் வசூலிக்கப்படுவதாக தெரிவித்த அந்த அமைப்பின் தலைவர் ரஞ்சித்.பி ஷா, தொழிற்சாலைகளுக்கான மின்கட்டணம் ரூ.4.10 மட்டும் தான் பிற தொழிற்சாலைகளுக்கு வசூலிக்கப்படுவதாக கூறினார்.
வங்கதேசம், சீனா ஆகிய நாடுகளுடன் போட்டி போட ஏதுவாக தமிழக அரசு மின்கட்டணத்தை சிறிது குறைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். நீண்ட காலமாக இத்துறையில் அண்டை நாடுகளுடன் ஒப்பிடுகையில் உற்பத்தி செலவைக் குறைக்க போராடி வருவதாக கூறினார். மேலும் நம்நாட்டில் தொழிலாளர்களுக்கான ஊதியம் அதிகம். ஆனாலும் தொழிலானர்கள் கிடைப்பதும் அரிதாகி வருவதாகவும் ஷா குறிப்பிட்டார்.
உற்பத்தி விலை அதிகரிக்க பல்வேறு காரணிகள் உள்ளது. உற்பத்தி விலையைக் குறைக்கும் வகையில் அரசிடம் சில சலுகைகளை எதிர்நோக்குவதாக அவர் கூறினார். தங்களுடைய பெரும்பாலான பிரச்சனைகள் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உற்பத்தி நிலையங்களை அமைத்துவிட்டால் தீர்ந்துவிடும் என்று கூறிய ஷா, அவ்வாறு அமைக்கப் பட்டு வரும் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் சில பொதுவான உள்கட்டமைப்பு வசதிகள் குறைவாக இருப்பதால் அங்குசெல்ல இன்னும் சில காலம் ஆகும் என்று கூறினார்.
அதுவரை மத்திய அரசு 100 விழுக்காடு சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். குறைந்தது 3 ஆண்டுகள் வருமான வரியில் இருந்து விலக்கு அளிப்பதுடன், சேவை வரியையும் திருப்பித் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். சீன நிறுவனங்களோடு போட்டியிட தங்களுக்கு பயம் இல்லை என்றும், சீன அரசுடன் போட்டியிட வேண்டியிருப்பதால்தான் இந்த சலுகையை எதிர்நோக்குவதாக அதன் பொதுச் செயலாளர் கே.ரேஷ்மா ராவ் கூறினார்.