புதிய தொழில் கொள்கையில் பாதகம் இருப்பதாக கூறிய மருத்துவர் ராமதாஸ், பத்து விழுக்காட்டிற்கும் கூடுதலான நன்செய் நிலங்கள் உள்ள செயற்குறிப்புகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட மாட்டாது என்பன உள்ளிட்ட வரிகளை டாக்டர் அவசரத்தில் சரியாகப் பார்க்கவில்லை என்று கருதுகிறேன் என்று மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் ஆற்காடு வீராசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் புதிய தொழில் கொள்கை பற்றி கடந்த ஓராண்டு காலமாக பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு, அதன் பின்னர் மூத்த அமைச்சர்களைக் கொண்டு ஒரு குழுவும் அமைக்கப்பட்டு, அந்தக் குழு இரண்டு மூன்று முறை கூடி விவாதித்து அதன் பின்னர் வெளியிடப்பட்டுள்ளது. அதன் பின்னர் தான் தமிழக அரசின் புதிய தொழில் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.
புதிய தொழிற் கொள்கை வெளியிடப்பட்டு, அது குறித்து தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர்கள் எல்லாம் ஒருவர் பாக்கியில்லாமல் அத்தனை பேரும் பாராட்டினார்கள். யாரும் சிறு குறையைக் கூடச்சுட்டிக் காட்டவில்லை. அந்த நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற போதே, புதிய தொழிற் கொள்கையை தோழமைக் கட்சித் தலைவர்களுக்கெல்லாம் உடனடியாக நகல்களை அனுப்பும்படி முதலமைச்சரே தன்னுடைய உதவியாளர்களுக்கு உத்தரவிட்டார். அவ்வாறு அனுப்பப்பட்ட 33 பக்கங்கள் கொண்ட அந்தப் புத்தகத்தை நம்முடைய முக்கிய தோழமைக் கட்சிகளில் ஒன்றான பா.ம.க.வினர் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் படித்து விட்டு, அதிலேயுள்ள சாதகங்களையும், பாதகங்களையும் தொகுத்து ஒரு நீண்ட கட்டுரையாக அனைத்து ஏடுகளுக்கும் வழங்கியிருக்கிறார்.
தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து தொழிலதிபர்களும் பாராட்டிய இந்தப் புதிய தொழில் கொள்கையில் டாக்டர் ராமதாஸ் எப்போதும் போல் சாதகங்களை விட பாதகங்கள் தான் அதிகமாக இருக்கிறதென சுட்டிக்காட்டியிருக்கிறார். புதிய தொழிற் கொள்கையில் உள்ள சாதகங் களையெல்லாம் மருத்துவர் பாராட்டியிருப்பதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
புதிய தொழில் துறை வகுக்கும் அமைச்சர்களைக் கொண்ட குழுவின் ஓர் உறுப்பினர் என்ற முறையில் மருத்துவரின் ஐயங்களுக்கு நான் விடையளிக்கக் கடமைப்பட்டுள்ளேன். வேலைவாய்ப்பை உருவாக்குவது பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது என்று முக்கியமாக மருத்துவர் கூறியிருக்கிறார். தொழிற் கொள்கையில் 2011 ஆம் ஆண்டிற்கு 20 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய தொழிற் கொள்கை வேளாண் பொருளாதாரத்தை நீண்ட காலத்திற்குப் பாதிக்கக்கூடிய விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்றும் டாக்டர் ராமதாஸ் சொல்லியிருக்கிறார். அந்தப் புத்தகத்தில் பக்கம் 6-ல் கூறப்பட்டுள்ள, தனியார் தொழிற் பூங்காக்களுக்கான நிலத்தை நேரடியாக வாங்கவேண்டும். அத்தகைய பூங்காக்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்கள், இயன்றவரை, வறண்ட பாசனமற்ற புன்செய் நிலங்களாக இருக்க வேண்டும். பத்து விழுக்காட்டிற்கும் கூடுதலான நன்செய் நிலங்கள் உள்ள செயற்குறிப்புகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட மாட்டாது'' என்ற வரிகளை டாக்டர் அவசரத்தில் சரியாகப் பார்க்கவில்லை என்று கருதுகிறேன்.
அது மாத்திரமல்ல, இன்றைய தினம் நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் தொழிற்சாலைகளுக்கு நிலம் வழங்குவது பற்றிய கொள்கை விரிவாக விவாதிக்கப்படவும் உள்ளது என்பதையும் அவருக்கு நான் தெரிவிக்கக்கடமைப்பட்டிருக்கிறேன்.
தனியார் தொழில்நுட்பப் பூங்காக்களுக்கு கட்டுப்பாடற்ற முறையில் அபிரிமிதமான ஊக்கம் அளிக்கப்பட்டுள்ளது என்றும் நில உச்ச வரம்புச் சட்டம் மீறப்படுவதற்கு வழி வகுக்கும் சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது என்றும் டாக்டர் தெரிவித்திருக்கிறார்.
தொழில் தொடங்குவதில் தற்போது இந்தியாவிலே உள்ள ஒவ்வொரு மாநிலமும் போட்டி போட்டுக் கொண்டு அதிக சலுகைகளை வழங்கி தொழில் முதலீட்டார்களை ஈர்ப்பதில் முனைப்பு காட்டி வருகின்ற நிலையில் நாமும் ஓரளவிற்காவது சலுகைகளை வழங்கினால் தான் தமிழ்நாட்டில் தொடங்க தொழில் முதலீட்டாளர்கள் வருவார் கள். அது மாத்திரமல்ல, மத்திய அரசு சிறப்பு பொருளாதார மையங்களுக்கு சலுகைகள் வழங்கப்படுவது குறித்து கொள்கை முடிவுகளை அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் தான் தனியார் சிறப்பு பொருளாதார மையங்களுக்கு தமிழக அரசு சலுகைகளை வழங்கி வருகிறது. நில உச்ச வரம்புச் சட்டம் மீறப்படுவதற்கு வழி வகுக்கும் சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை.
இந்தத் தொழில் கொள்கை உயர்ந்த தொழில் தேர்ச்சி பெற்ற தொழிலாளர்களுக்கு மட்டுமே பொருத்தமானதாக உள்ளதென்றும், தொழில் தேர்ச்சி இல்லாத பரந்த உழைக்கும் மக்களுக்கு ஆதாயம் அளிக்கும் வேலை வாய்ப்புக்கு முக்கியத்துவம் இல்லையென்று டாக்டர் கருத்து தெரிவித்திருக்கிறார்.
தற்போது வெளியிடப்பட்டுள்ள தொழில் கொள்கை பெரிய தொழில்களைப் பொறுத்த ஒன்றாகும். சிறு தொழில்களைப்பற்றி தனியாக வேறொரு தொழிற் கொள்கையும் விரைவில் வெளி வரவுள்ளது என்பதை மருத்துவர் அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டுமென்ற நோக்கத்துடன் அல்ல, விளக் கம் அளிக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.