மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள டாமன் அண்ட் டையூ, தாத்ரா, நகார் ஹவேலி ஆகிய யூனியன் பிரதேசங்களில் மதிப்பு கூட்டு வரியை அமல்படுத்த பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியது.
இந்த யூனியன் பிரதேசங்களில் வாட் என்று அழைக்கப்படும் மதிப்பு கூட்டு வரியை அமல்படுத்த மத்திய அரசு அவசரச் சட்டத்தை பிறப்பித்தது. இந்த அவசர சட்டத்திற்கு தற்போது மத்திய அரசு அங்கிகாரம் வழங்கியுள்ளது. இதன் மூலம் மதிப்பு கூட்டு வரியின் விதிகளின் படி, வர்த்தகர்கள் கூடுதலாக செலுத்திய வரியை திரும்ப பெற முடியும்.
அரசியல் சாசனத்தின் 240 பிரிவின் படி பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்திற்கு, மத்திய அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியதாக மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்பத்துறை அமைச்சர் பி.ஆர். தாஸ் முன்ஷி தெரிவித்தார்.