மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் (சென்செக்ஸ்) 639.63 புள்ளிகள் அதிகரித்தது. அதே போல் தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் (நிப்டி) 142 புள்ளிகள் உயர்ந்தது.
காலையில் மும்பை பங்குச் சந்தையில் பங்குகளின் விலை தொடக்கத்தில் இருந்தே அதிகரித்தது. காலையில் பங்கு வர்த்தகம் 18,525.61 புள்ளியுடன் தொடங்கியது. மதியம் உணவு இடை வேளைக்கு பிறகு குறியீட்டு எண் 19,000 ஐ தாண்டியது. ஒரு நிலையில் 19,095.75 புள்ளியை தொட்டது. இறுதியில் 19058.67 புள்ளியில் முடிந்தது. (வெள்ளிக் கிழமை இறுதி நிலவரம் 18419.04 புள்ளிகள்)
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் ஆயிரம் புள்ளிகளை நான்கு வர்த்தக தினத்தில் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அக்டோபர் 9 ந் தேதி 18,000 புள்ளிகளை தொட்டது.
காலையில் தேசிய பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கியபோது அதன் குறியீட்டு எண் 5428.35 புள்ளிகளாக இருந்தது. இது ஒரு நிலையில் 5,682.65 புள்ளிகளை தொட்டது. மிக குறைந்த அளவாக 5419.90 புள்ளிகளாக இறங்கியது.
இறுதியில் 5670.40 புள்ளிகளில் முடிந்தது. (வெள்ளிக் கிழமை இறுதி நிலவரம் 5428.25 புள்ளிகள்)
பங்குச் சந்தையில் யூக வணிகத்தில் ஈடுபடுபவர்கள் அதிகளவு பங்குகளை வாங்கியதால் புள்ளிகள் அதிகரித்தன. உலோக நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகளவு உயர்ந்தது. அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றம், ஆக்ஸ்ட் மாதத்தில் தொழிற்சாலைகளின் உற்பத்தி அதிகரித்திருப்பதற்காக வந்த அதிகாரபூர்வ தகவல் ஆகியவையே பங்குகளின் விலை உயர்வுக்கு காரணம் என்று புரோக்கர்கள் தெரிவித்தனர். உலோக உற்பத்தி நிறுவனங்களின் பங்குகள், வங்கி, இயந்திர உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் பங்குகள், ரிலையன்ஸ் எனர்ஜி ஆகியவைகளின் பங்குகளின் விலை அதிகரித்தது.
இன்று பங்குகளின் விலைகள் உயர்வுக்கு காரணம் வெள்ளிக்கிழமையன்று பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி ஆகிய இருவரும், இப்போதற்கு தேர்தல் இல்லை என்று அறிவித்தது, பங்குச் சந்தையில் உற்சாகத்தை ஏற்படுத்தியது தான் காரணம் என்று ஒரு தரப்பு புரோக்கர்கள் தெரிவித்தனர்.
சென்செக்ஸ் குறியீட்டு எண்ணில் உள்ள 30 பங்குகளில் 27 நிறுவனத்தின் பங்குகளின் விலை அதிகரித்தது. மூன்று நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தது.
மும்பை பங்குச் சந்தையில் 1,858 நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரித்தது. 883 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தது. 359 நிறுவனங்களின் பங்குகளின் விலையில் மாற்றமில்லை.
மிட்கேப் பிரிவு குறியீட்டு எண் 7,722 புள்ளிகளாக அதிகரித்தது. இது 2.56 விழுக்காடு உயர்வு.
சுமால் கேப் குறியீட்டு எண் 9,314.87 புள்ளிகளாக அதிகரித்தது. இது 2.38 புள்ளி உயர்வு.