பாரத ஸ்டேட் வங்கி பங்கு வெளியிட்டு ரூ.10 ஆயிரம் கோடி திரட்ட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது என்று நிதித்துறை சேவைகள் செயலாளர் விநோத் ராய் தெரிவித்தார்.
டெல்லியில் இலாப நோக்கில் இல்லாத சிறு கடன் நிதி நிறுவனங்களின் மாநாடு நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள வந்த விநோத் ராய் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாரத ஸ்டேட் வங்கி ரூ.10 ஆயிரம் கோடி முதலீடு திரட்ட மத்திய அரசு கொள்கை அளவில் அனுமதி கொடுத்துள்ளது. இந்த முதலீடு எப்படி திரட்டுவது என்பது பற்றி முடிவு செய்யப்படவில்லை. இந்த முதலீடு நிதியாண்டின் இறுதிக்குள் திரட்டப்படும் என்று ராய் தெரிவித்தார்.
இந்த முதலீட்டை திரட்ட ஸ்டேட் வங்கி பங்குகளை வெளியிடுவதா அல்லது முன்னுரிமை பங்குகளை வெளியிடுவதா என்பது குறித்து முடிவு செய்யப் படவில்லை.
தற்போது ஸ்டேட் வங்கியில் மத்திய அரசுக்கு 59.73 விழுக்காடு பங்கு உள்ளது. பங்குகளை வெளியிட்டால், மத்திய அரசின் வசம் உள்ள பங்குகளின் எண்ணிக்கை குறையும். உரிமை பங்கு வெளியிட்டால் அரசு வசம் உள்ள பங்குகளின் எண்ணிக்கை குறையாது.