மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் இன்று ஒரே நாளில் 789 புள்ளிகள் அதிகரித்தது. இறுதியில் 18,280.24, புள்ளிகளாக முடிவடைந்தது. நேற்றைய இறுதி நிலவரம் 17491.39 புள்ளிகள்.
காலையில் வர்த்தகம் தொடங்கியவுடன் பங்குகளின் விலை குறைந்ததால் குறியீட்டு எண் 17,287.19 புள்ளிகளாக குறைந்தது. பிறகு படிப்படியாக அதிகரித்து, ஒரு நிலையில் அதிகபட்சமாக 18,327.42 புள்ளிகளைத் தொட்டது.
இதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி குறியீட்டு எண் 242.15 புள்ளிகள் அதிகரித்தது. காலையில் வர்த்தகம் தொடங்கிய போது, தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண்ணும் குறைந்தது. பிறகு படிப்படியாக முன்னேறி இறுதியில் 5,327.25 புள்ளிகளாக முடிவுற்றது.
இன்று வங்கி, ரியல் எஸ்டேட், இயந்திரங்கள், உருக்காலை மற்றும் உலோக நிறுவன பங்குகளின் விலை அதிகரித்தது.
காலையில் அரசியல் நெருக்கடி உண்டாகும் என்ற தகவலால் பங்குச் சந்தை பாதிக்கப்பட்டது. பிறகு ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கும், இடது சாரி கட்சிகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்த தகவல் வந்தது. இதனால் மீண்டும் பங்குச் சந்தை சுறு சுறுப்படைந்தது.
இறுதி நிலவரம் :
மும்பை பங்குச் சந்தை 18,280.24 (நேற்று 17491.39)
தேசிய பங்குச் சந்தை 5,327.25 (நேற்று 5085.10)