Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமெரிக்காவில் முதலீடு- இந்திய வங்கிகள் ரூ.8 ஆயிரம் கோடி நட்டம்!

Advertiesment
அமெரிக்காவில் முதலீடு- இந்திய வங்கிகள் ரூ.8 ஆயிரம் கோடி நட்டம்!

Webdunia

, சனி, 6 அக்டோபர் 2007 (12:31 IST)
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள கடன் நிதி நெருக்கடியால் (சப் - பிரைம்) இந்திய வங்கிகளுக்கு ரூ.8 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

பெங்களூரில் இந்திய தொழிலக கூட்டமைப்பு சார்பில் அமெரிக்க கடன் நிதி நெருக்கடி பற்றிய கருத்தரங்கு நேற்று நடை பெற்றது. இதில் மத்திய அரசின் பொருளாதார ஆலோசகர் டாக்டர். பார்த்தசாரதி சோமி உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது :

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள கடன் நிதி நெருக்கடியால் (சப் - பிரைம்) இந்திய வங்கிகளுக்கு ரூ.8 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மதிப்பீடு முன்னணி வங்கிகள், பொருளாதார ஆய்வு நிறுவனங்களிடம் இடைவிடாது நடத்தப்பட்ட ஆலோசனையின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது.


இந்திய வங்கிகள், அமெரிக்க சொத்து மறு ஈட்டு கடன் சந்தையிலும், அமெரிக்க பங்குச் சந்தைகளிலும் முதலீடு செய்துள்ளன. இந்த இரண்டு வகை முதலீட்டால் இந்திய
வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது.

அந்நிய நாடுகளில் முதலீடு செய்யும் நான்கு வங்கிகளும் நஷ்டம் அடைந்துள்ளன. இந்த வங்கிகள் ஒவ்வொன்றும் குறைந்த பட்சம் பத்து இலட்சம் டாலரில் இருந்து 20 இலட்சம் டாலர் வரை நஷ்டம் அடைந்திருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் இந்த வங்கிகள் அமெரிக்க மறு ஈட்டு கடன் சந்தையில் நேரடியாக குறைந்த அளவு முதலீடு செய்திருந்ததால் இவைகளின் நஷ்டமும் குறைவாக உள்ளது.

அமெரிக்காவின் கடன் நிதி நெருக்கடியால் ஏற்பட்டுள்ள தாக்கத்தையும், இதற்கு அமெரிக்க மத்திய வங்கி எடுக்கும் நடவடிக்கைகளையும் மத்திய அரசு மதிப்பிட்டது. இந்த மதிப்பீட்டின் படி அமெரிக்க நிதி நெருக்கடி இந்திய பங்குச் சந்தையில் சில பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது தெரிய வந்தது.

நெருக்கடியில் உள்ள நாடுகளில் இருந்து முதலீடுகள் பாதுகாப்பான இந்திய நிதி முதலீட்டுச் (பங்குச் சந்தை) சந்தையை நோக்கி வந்து குவிகின்றன. இதற்கு காரணம் ஹெட்ஜ் நிதிகளுக்கு இந்திய முதலீட்டு சந்தை விருப்பமானதாக இருப்பதே.

இதன் காரணமாக அளவிற்கு அதிகமாக வந்து குவியும் அந்நியச் செலவாணியால், நிதி மேலாண்மையில் உள்ளவர்களுக்கும், (ரிசர்வ் வங்கி) அரசுக்கும் கவலை ஏற்பட்டுள்ளது. இதனால் எடுக்கப்பட்ட ஒரு கொள்கை முடிவின்படி அதிகளவு நிதி நாட்டில் இருந்து வெளியே கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகிறது.

அதே நேரத்தில் அந்நிய நாடுகளில் பணப்புழக்கம் குறைந்து வருகிறது. இதன் காரணமாக இந்தியாவின் வளர்ச்சி பாதிக்கப்படாமல் இருக்க உள்நாட்டில் நிதி மூலதனம் திரட்ட கவனம் செலுத்தப்படுகிறது.

மற்ற நாடுகளில் ஏற்பட்டுவரும் பணப்புழக்கத்தின் தாக்கத்தினால், இந்தியாவின் ரூபாய் மதிப்பு அதிகரிப்பதும் குறைவதுமாக இருக்கிறது. நாம் இதை எதிர்கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும்.

இந்தியாவிற்கு கடந்த பதினெட்டு மாதங்களில் அதிகளவு குறுகிய கால முதலீடு வந்துள்ளது (நாட்டை விட்டு எந்த நிமிஷமும் வெளியேறும் முதலீடே குறுகிய கால முதலீடு என்று அழைக்கப்படுகிறது) இதனால் தான் இந்திய ரூபாயின் மதிப்பு அதிகளவு உயர்ந்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மலிவானதாக உள்ளது. அதே நேரத்தில் ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது.

அரசு பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த தேவையான நேரத்தில் எல்லா நடவடிக்கை எடுக்கும். வட்டி விகிதம், பண இருப்பை அதிகரிப்பது மற்றும் நிதிச் சந்தையில் நேரடி தலையீடு போன்ற நடவடிக்கைகளை எடுக்கும் என்று பார்த்தசாரதி சோமி கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil