தீபாவளிக்காக கோ-ஆப் டெக்ஸ்சில் அழகு மயில் பட்டுச்சேலை உள்பட 9 புதிய டிசைன்களில் சேலைகள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா அறிமுகப்படுத்தினார்.
கோ-ஆப் டெக்ஸ், தீபாவளி பண்டிகையையொட்டி இந்த ஆண்டு அழகுமயில் பட்டுச்சேலைகள், கோலங்கள் கலப்பிழை பட்டு சேலைகள், மலை அரசி பருத்தி சேலைகள், மாந்துளிர் பருத்தி சேலைகள், திருவரங்கம் பருத்தி சேலைகள், நாச்சியார் பருத்தி சேலைகள், மல்லிகை பருத்தி சேலைகள், கிரி பருத்தி சேலைகள் உள்ளிட்ட 9 புதிய டிசைன் சேலைகள் விற்பனைக்கு தயாராக உள்ளன.
இந்த புதிய டிசைன்கள் அறிமுக விழா, கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை தொடக்கவிழாவை கைத்தறி மற்றும் துணித்தொழில் துறை அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா குத்துவிளக்கு ஏற்றி விற்பனையை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த ஆண்டு தீபாவளி, ரம்ஜான், நவராத்திரி விழா ஆகியவற்றுக்கு மொத்தவிற்பனை ரூ.50 கோடிக்கு உயரும். பருத்தி சேலைகள் ரூ.450 முதல் ரூ.2 ஆயிரம்வரைக்கும் உள்ளன. பட்டுச்சேலைகள் ரூ.2ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரைக்கும் கிடைக்கும் என்றார்.
இந்த ஆண்டு வாசனைதரும் சட்டைகளை அறிமுகப்படுத்தி உள்ளோம். அதில் லாவண்டர், ஸ்ட்ராபெர்ரி, ரோஜா ஆகிய வாசனை இருக்கின்றன. இந்த வாசனை 50 முறை சலவை செய்யும் வரை இருக்கும் என்றார் அமைச்சர் ராஜா.
மதுரை மீனாட்சி அம்மனுக்கு ஒரு பச்சை நிறத்தில் பட்டு சேலை தயாரித்துள்ளோம். கர்த்தர் ஏசு, கண்ணன், இஸ்லாமிய சின்னம் ஆகியவை தனித்தனியே சுவரில் தொங்கவிடும் படம் போல தயாரிக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் தெரிவித்தார்.
அடுக்கு துகில் திருமண பட்டு சேலை என்ற புதிய ரகசேலை நன்றாக உள்ளது அதன்விலை ரூ.40 ஆயிரம். ஆயுர்வேத ஆடைகளையும் தயாரிக்க திட்டமிட்டுள்ளோம். 128 நாட்களுக்கு 30 விழுக்காடு தள்ளுபடி விற்பனை நடைபெற உள்ளது என அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா கூறினார்.