மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாசிக் வெங்காய வியாபாரிகள் வேலை நிறுத்தம் செய்தனர்.
மத்திய அரசு வெங்காயம் ஏற்றுமதி செய்வதற்கு தடை விதித்திருப்பதுடன், ஏற்றுமதி உரிமத்தின் கீழ் அரசின் அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தின் மூலமாக மட்டுமே ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று அறிவித்துள்ளது.
இதை மத்திய வர்த்தக அமைச்சர் கமலநாத் நேற்று அறிவித்தார்.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறயிருப்பதாவது, வெங்காயம் ஏற்றுமதி செய்வதற்கு கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. இதன்படி ஏற்றுமதி செய்வதற்கான உரிமத்தின் அடிப்படையில், அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தின் வாயிலாக மட்டும் ஏற்றுமதி செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் பெரிய வெங்காய மொத்த விற்பனை சந்தை மகாராஷ்டிர மாநிலத்தில் நாசிக் நகரில் உள்ளது.
இங்கிருந்து தான் நாட்டின் பல பகுதிகளுக்கும் வெங்காயம் விற்பனை செய்ய அனுப்பப்படுகிறது. அதே போல் ஏற்றுமதியும் செய்யப்படுகிறது.
தங்கத்திற்கு மும்பையில் உள்ள விலை நிலவரத்தை வைத்து, மற்ற நகரங்களில் விலை நிர்ணயிக்கப்படுவதை போல், நாசிக்கில் வெங்காய விலை நிலவரத்தை பொறுத்து மற்ற நகரங்களிலும் விலைகள் நிர்ணயிக்கப்படுகின்றன.
மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் வெங்காயம் பயிரிடப்படும் பகுதிகளில், சென்ற மாதம் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் விவசாயிகள் வெங்காயத்தை விற்பனைக்கு கொண்டு வரவில்லை. அத்துடன் வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால், அறுவடை செய்ய தயாராக இருந்த நிலையில் வெங்காயம் அழுகியது. இந்த காரணங்களினால் கடந்த ஒரு வாரமாக வெங்காயம் விற்பனைக்கு வருவது குறைந்தது.
அத்துடன் இந்த வருடம் வெங்காயம் விதைக்கப்படும் காலத்தில் பருவமழை தவறியதால், உற்பத்தி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போன்ற காரணங்களினால்
வெங்காயத்தின் விலை கிலோ ரூ. 30 வரை அதிகரித்தது.
உள்நாட்டில் வெங்காயத்தின் விலை அதிகரிப்பதை தடுக்க, மத்திய அரசு பதினைந்து நாட்களுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்ய தடை விதித்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாசிக் வெங்காய மொத்த வெங்காய வியாபாரிகள் இரண்டு நாள் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.
வெங்காயத்தின் தேவை அதிகரித்து இருப்பதால் விலைகள் உயர்ந்துள்ளது. இதே நிலவரம் அடுத்த 15 முதல் 20 நாட்கள் வரை தொடரும். அதற்கு பிறகு சரக்கு வரும் போது விலைகள் குறையும். வெங்காயத்திற்கு தட்டுபாடு இல்லை என்று நாசிக் வியாபாரிகள் கூறுகின்றனர்.
பூனாவில் உள்ள மொத்த காய்கறி சந்தையின் நிரிவாக அதிகாரி பி.ஜெ.தேஷ்முக் கூறுகையில், தற்போது இருப்பில் வைக்கப்படுள்ள வெங்காயம் விற்பனைக்கு வருவது முடிந்து விட்டது. இதனால் விலைகள் அதிகரித்துள்ளது. புதிதாக அறுவடை செய்த சரக்கு வரும் போது விலைகள் குறையும். தற்போதுள்ள நிலைமை 8 முதல் 10 நாட்களுக்குள் மாறும் என்று தெரிவித்தார்.
இந்தியாவின் தென் மாநிலங்களை விட, மற்ற பகுதிகளில் வெங்காயம் உணவில் இன்றியமையாததாக இடம் பெற்றுள்ளது.
வெங்காயத்தின் விலை அதிகரித்து, மக்கள் வெறுப்படைந்தால் ஆட்சியாளர்கள் கண்ணீர் சிந்தும் நிலைமை ஏற்பட்டுவிடும்.
1998 ஆம் ஆண்டு வெங்காய விலை ஏற்றத்தினால், பாரதிய ஜனதா ஆட்சியை இழந்தது நினைவு இருக்கலாம்.
இதற்காக தான் மத்திய அரசு துரிதமாக செயல்பட்டு வெங்காயம் ஏற்றுமதி செய்வதற்கு 15 நாட்களுக்கு தடை விதித்துள்ளது.