டாலர் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததால் ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்பட்டு உள்ள இழப்பை ஈடுசெய்ய ரூ.1400 கோடியில் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு அறிவித்து உள்ளது என மத்திய ஜவுளித் துறை இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
கோவையில் தென்னிந்திய மில்கள் சங்கம் (சைமா) நடத்திய ஜவுளித் துறையினருக்கான கருத்தரங்கில் மத்திய அமைச்சர் இளங்கோவன் பேசுகையில், தாராளமயமாக்கல், கோட்டா முறை நீக்கம் காரணமாக ஜவுளி வர்த்தகம் பெரும் வளர்ச்சியை அடைந்து உள்ளது. 2 ஆண்டுகளில் 10 விழுக்காடு வளர்ச்சியை இத் துறை அடைந்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் இது 16 வழுக்காடாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
சர்வதேச அளவில் இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி 3 விழுக்காடு தான். ஆனால், சீனாவின் ஜவுளி ஏற்றுமதி 20 விழுக்காடு. போட்டி நிறைந்த இன்றைய சூழலில் இந்திய ஜவுளி ஆலைகள் உற்பத்தியை பெருக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதன் மூலமாகவே இது சாத்தியமாகும் என்றார் இளங்கோவன்.
இதைக் கருத்தில் கொண்டு சர்வதேச தரத்துக்கு ஜவுளி ஆலைகளை நிறுவுவதற்காக ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காக்களை மத்திய அரசு அமைக்கிறது. இத் திட்டத்தில் 30 ஜவுளி பூங்காக்கள் அமைக்க ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ரூ.2 ஆயிரத்து 897 கோடியில் அமையும் இத்திட்டத்தில் மத்திய அரசின் பங்குத் தொகை ரூ.1,055 கோடியாகும் என்று மத்திய ஜவுளித் துறை இணை அமைச்சர் இளங்கோவன் கூறினார்.