மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் 21.85 புள்ளிகள் அதிகரித்தது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகம் தொடங்கியவுடனேயே, வெளிநாட்டு மூதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டினார்கள். இதனால் சிறிது நேரத்திலேயே பங்குகளின் விலை உயர்ந்து குறியீட்டு எண் 17,000-ஐ தாண்டியது. ஒரு ஏற்ற இறக்கம் என்ற போக்கே நிலவியது. ஒரு கட்டத்தில் குறியீட்டு எண் 17,073.87-ஐ தொட்டது.
பங்குச் சந்தையில் ஐந்து நாட்களிலேயே ஆயிரம் புள்ளிகள் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. செப்டம்பர் 19 ஆம் தேதி 16,000 புள்ளிகளாக இருந்தது. ஐந்து வர்த்தக நாட்களிலேயே ஆயிரம் புள்ளிகள் அதிகரித்து, இன்று 17,000 புள்ளிகளைத் தாண்டியது.
நேற்று ரிசர்வ் வங்கி, அந்நியச் செலாவணி இருப்பை குறைக்க பரஸ்பர நிதி நிறுவனங்கள், தனி நபர்கள் வெளிநாடுகளில் செய்யும் உச்சவரம்பை அதிகரித்தது. இத்துடன் நிறுவனங்களும் வெளிநாடுகளில் வாங்கியுள்ள கடனை, காலக்கெடுவுக்கு முன்பே திருப்பிச் செலுத்தலாம் என்ற அறிவிப்பு வெளியிட்டது. இந்த காரணங்களினால் காலையில் அந்நியச் செலாவணி சந்தையில் டாலரின் மதிப்பு சிறிது அதிகரித்தது.
இதன் எதிரொலியாக தகவல் தொழில் நுட்ப நிறுவனப் பங்குகள் வாங்குவதில் ஆர்வம் காணப்பட்டது. இவைகளின் விலையும் அதிகரித்தது.
இதே போல் தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டியும் 4980.85 புள்ளிகள் வரை உயர்ந்து, இறுதியில் 4,940.50 புள்ளிகளாக முடிவடைந்தது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 2 புள்ளிகள் அதிகம்.
மும்பை பங்குச் சந்தையில் 1,465 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1243 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 337 நிறுவன பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.
இன்று சத்யம் கம்ப்யூட்டர்ஸ், இன்போசியஸ், டி.சி.எஸ்., விப்ரோ., டாக்டர் ரெட்டி லேபரட்டரிஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகளின் விலை அதிகரித்தது.
ரிலையன்ஸ் எனர்ஜி, ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், மாருதி சுஜூகி நிறுவனப் பங்குகளின் விலைகள் குறைந்தது.