Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டாலர் மதிப்பு சரிவை தடுத்து நிறுத்த ரிசர்வ் வங்கி நடவடிக்கை!

டாலர் மதிப்பு சரிவை தடுத்து நிறுத்த ரிசர்வ் வங்கி நடவடிக்கை!

Webdunia

, புதன், 26 செப்டம்பர் 2007 (16:07 IST)
ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதால் ஏற்றுமதியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டாலர் மதிப்பு சரிவை தடுத்து நிறுத்த ரிசர்வவங்கி சிநடவடிக்கைகளை அறிவித்துள்ளது.

இதன்படி பரஸ்பர நிதி நிறுவனங்களுக்கு (மியூச்சுவல் ஃபண்ட்) வெளிநாடுகளில் முதலீடு செய்ய இருந்த வரம்பை ரிசர்வ் வங்கி தளர்த்தியுள்ளது.

அத்துடன் இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் வாங்கிய கடனை, காலக்கெடுவுக்கு முன்னரே திருப்பி செலுத்தும் அளவை, ரிசர்வ் வங்கியின் முன் அனுமதியின்றி 400 மில்லியன் டாலரில் இருந்து 500 மில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

பரஸ்பர நிதிகள் வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்யும் அளவை, 4 பில்லியன் டாலரில் இருந்து 5 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

ரிசர்வ் வங்கி அனுமதி இல்லாமல், தனி நபர்கள் ஒரு நிதியாண்டில் வெளிநாடுகளில் முதலீடு செய்யும் அளவை 1 இலட்சம் டாலரில் இருந்து 2 இலட்சம் டாலராக உயர்த்தியுள்ளது.

ரிசர்வ் வங்கி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில், வெளிநாட்டு நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துள்ள நிறுவனங்களில் அல்லது முற்றிலும் சொந்தமாக வெளிநாடுகளில் தொடங்கியுள்ள நிறுவனங்களில் முதலீடு செய்யும் அளவையும் அதிகரித்துள்ளது.

இதன்படி ரிசர்வ் வங்கியின் முன் அனுமதி இல்லாமல் இந்திய நிறுவனங்கள், அவற்றின் மதிப்பில் முதலீடு செய்யும் அளவு முன்பு 300 விழுக்காடாக இருந்ததை 400 விழுக்காடாக அதிகரித்துள்ளது. இந்த சலுகை பலர் பங்குதாரராக உள்ள, பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

இந்திய நிறுவனங்கள் அவற்றின் மதிப்பில் 35 விழுக்காடு வரை முன்பு வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்யலாம் என்று இருந்ததை, இப்பொழுது 50 விழுக்காடாக ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.

முன்பு இந்திய பங்குச் சந்தையில் பதிவு செய்துள்ள, இந்திய நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்ய வேண்டுமெனில், அந்த வெளிநாட்டு நிறுவனம், இந்திய நிறுவனத்தில் 10 விழுக்காடு பங்குகளை கொண்டு இருக்க வேண்டும் என்று இருந்த விதியை ரிசர்வ் வங்கி நீக்கியுள்ளது.

பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபியிடம் பதிவு செய்துள்ள பரஸ்பர நிதி நிறுவனங்கள், வெளிநாடுகளில் முதலீடு செய்வதற்கு இருந்த உச்சவரம்பை 4 பில்லியன் டாலரில் இருந்து 5 பில்லியன் டாலராக உயர்த்தியுள்ளது.

அத்துடன் செபி சில குறிப்பிட்ட பரஸ்பர நிறுவனங்களுக்கு, வெளிநாட்டு பங்குச் சந்தையில் வர்த்தகம் நடைபெறும் நிதி நிறுவனங்களில் 1 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்யலாம் என்று கொடுத்திருந்த அனுமதி தொடரும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

அந்நியச் செலவாணி சந்தையில் டாலரின் மதிப்பு குறைந்து, இந்திய ரூபாயின் மதிப்பு சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக ஆயத்த ஆடை, பின்னலாடை, மருந்து ஏற்றுமதியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஏனெனில் இவை ஏற்றுமதி செய்யும் பொருட்களின் விலையை டாலரிலேயே பெறுகின்றன.

இதே போல் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் வருவாயின் பெரும் பகுதியை டாலரில் பெருகின்றன.

டாலரின் வீழ்ச்சி, இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வால், தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அரசு ஏற்றுமதியாளர்களுக்கு சலுகையை அறிவிக்க வேண்டும் என்று தொடர்நது பல்வேறு ஏற்றுமதியாளர் கூட்டமைப்புகள் அரசிடம் வலியுறுத்தி வந்தன.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு நியூயார்க்கில் மத்திய வர்த்தகம் மற்றம் தொழில் துறை அமைச்சர் கமல்நாத்திடம், டாலரின் மதிப்பு குறைவதால், இந்திய ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்குமா என்று கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த அமைச்சர் கமல்நாத், இந்தியாவில் பொருளாதார சீர்திருத்தம் மேற் கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவில் சந்தை பொருளாதாரம் கடைபிடிக்கப்படுகிறது. இதனால் மத்திய அரசு தலையிடாது என்று கூறியிருந்தார்.

இந்தியாவின் ஏற்றுமதியை விட, இறக்குமதி அதிகம்.
ஏற்றுமதி - இறக்குமதி வர்த்தகம் டாலரில் நடைபெறுகிறது. குறிப்பிட்ட அளவிற்கு மேல் டாலரின் மதிப்பு குறைந்து, ரூபாயின் மதிப்பு அதிகரித்ததால் ஏற்றுமதி வருவாய் பெரிதும் குறைந்தது. இதனால் ரிசர்வ் வங்கி தலையிட்டு, வெளிநாடுகளில் முதலீடு செய்ய பல சலுகைகளை அறிவித்துள்ளது.

இதன் மூலம் சந்தையில் டாலர் கிடைப்பது குறைந்து, டாலரின் மதிப்பு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இப்பொழுது அறிவித்துள்ள சலுகைகளால் எதிர்பார்க்கும் மாற்றங்கள் ஏற்பட்டுவிடாது என்ற கருத்தும் நிலவுகிறது. ஏனெனில் முன்பே பரஸ்பர நிதி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், தனி நபர்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்ய அனுமதிக்கபட்ட அளவிற்கு, முதலீடு செய்யவில்லை. இப்பொழுது அளவை உயர்த்தியிருப்பதால், எவ்வித மாற்றமும் ஏற்பட்டுவிடாது என்று ஒரு தரப்பு நிபுணர்கள் கூறுகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil