சென்னைக்கு அருகே இருங்காட்டுக் கோட்டையில் அமைக்கபபட்டுள்ள ஆயத்த ஆடை பூங்காவில் போதிய வசதிகளை சிப்காட் செய்து கொடுக்கவில்லை என தொழில் அதிபர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சென்னை அருகே இருங்காட்டுக் கோட்டையில் சிப்காட் என்று அழைக்கப்படும் தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகம் ஆயத்த ஆடைகளுக்கான தொழிற் பேட்டையை அமைத்துள்ளது. இந்த தொழிற்பேட்டை 2003 ஆம் ஆண்டு மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியுடன் அமைக்க திட்டமிடப்பட்டது. இதை தொடர்ந்து 123 ஏக்கர் நிலம் ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள், தொழிற்கூடங்களை அமைக்க குத்தகைக்கு விடப்பட்டது.
இந்த தொழிற்பேட்டையை அமைக்கும் அமைப்பான ஆயத்த ஆடை மற்றும் கைத்தறி ஏற்றுமதியாளர்கள் சங்கம், சிப்காட்டிடம் படிப்படியாக அதிக தொழிற்கூடங்கள துவக்கும் வகையில், தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் படி கேட்டுக் கொண்டது.
சாலை, தண்ணீர், தெரு விளக்கு, கழிவுநீர் குழாய்கள், ஆகியவற்றை அமைக்கும் படி கேட்டுக் கேட்டுக் கொண்டது.
அத்துடன் பொதுவான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், வடிவமைப்பு மற்றம் பயிற்சி மையம், கண்காட்சி அரங்கு, விடுதி, பெட்டகங்க டிரக் போக்குவரத்து மையம் ஆகியவற்றையும் அமைக்கும் படி கேட்டுக் கொண்டது.
இருங்காட்டு கோட்டையில் அடிப்படை உள்கட்டமைப்புகளான சாலை, தெரு விளக்குகள், கழிவு நீர் குழாய் போன்றவைகளை தவிர, மற்ற எந்த வசதிகளையும் சிப்காட் செய்யவில்லை. இந்த வசதிகளை ஏற்படுத்தும் படி பல முறை கேட்டுக் கொண்டோம். இது வரை எந்த பலனும் இல்லை என்று இந்த சங்கத்தின் நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
இந்த சங்கத்தின் துணைத் தலைவர் பிரகாஷ் சசிட் கூறும் போது,
இந்த காலதாமத்தினால் மத்திய ஜவுளி அமைச்சகம் ஒதுக்கிய ரூ. 6 கோடி பயன்படுத்தாமல் போய்விட்டது. இந்த வசதிகளை ஏற்படுத்துவதற்கு சிப்காட் விலைப்புள்ளிகளை (டெண்டர்) அறிவித்தது. ஆனால் சிப்காட் மதிப்பீட்டைவிட அதிகமாக தொகைகள் விலைப்புள்ளியில் கேட்கப்பட்டன. இதனால் இந்த வசதிகள் செய்யப்படவில்லை என்று கூறினார்.
சங்கத்தின் மற்றொரு நிர்வாகியான செல்வின் பிரபாகர் கூறும் போது, நாங்கள் சிப்காட் அதிகாரிகளை கடைசியாக சந்தித்தபோது, சில வசதிகள் இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று கூட கூறினோம் என்றார்.
இந்த தொழிற்பேட்டையில் உற்பத்தி கூடங்களை அமைத்துள்ளவர்கள், எளிதாக மூடிவிட்டு வெளியேற முடியாது. ஏனெனில் இங்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனங்கள் கோடிக்கணக்கில் மூதலீடு செய்துள்ளன. நிலத்திற்கான குத்தகை தொகையை செலுத்தியுள்ளதுடன், கட்டிடம், இயந்திரங்கள் போன்றவைகளுக்கும் மூதலீடு செய்துள்ளன.
இதற்கு மத்திய அரசு ஒதுக்கிய ரூ. 16 கோடியில், சிப்காட் ரூ. 10 கோடி செலவழித்துள்ளது. இப்போது முதலில் தொழிற்கூடங்களை அமைத்த ஐந்து நிறுவனங்கள் உற்பத்தியை துவக்கியுள்ளன. 10 நிறுவனங்கள் விரைவில் உற்பத்தியை துவங்கும் நிலையில் உள்ளன என்று இந்த சங்கத்தினர் தெரிவித்தனர்.
இந்த சங்கத்தின் துணைத் தலைவர் பிரகாஷ் சசிட், இருங்காட்டுக் கோட்டையில் உள்ள மற்ற பிரச்சனைகள் பற்றி கூறும் போது, இதற்கு அருகில் அமைக்கப்பட்டு வரும் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் புதிய அதிகள்வு புதிய தொழிற்சாலைகள் துவக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலைகள், வாகன உற்பத்தி தொழிற்சாலைகள் துவக்கப்பட்டு வருகின்றன. இதனால் தொழிலாளர்கள் கிடைப்பதும் கஷ்டமாக இருக்கின்றது. தொழிலாளர்கள் அதிக சம்பளத்தை எதிர்பார்க்கி்ன்றனர் என்று தெரிவித்தார்.