வரும் செப்டம்பர் 14-ந் தேதிக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்த மத்திய அரசு உத்தேசித்துள்ளது.
கச்சா எண்ணையின் விலை கடந்த பிப்ரவரி மாதத்துக்கு பிறகு இதுவரை 30 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.
இதனால் பொதுத்துறை எண்ணை நிறுவனங்களுக்கு பெட்ரோல் விற்பனையில் லிட்டருக்கு 5 ரூபாய் 88 காசுகளும், டீசல் விற்பனையில் லிட்டருக்கு 4 ரூபாய் 80 காசுகளும், மண்ணெண்ணை விற்பனையில் லிட்டருக்கு 14 ரூபாய் 63 காசுகளும், சமையல் எரிவாயு உருளைகளுக்குகு 189 ரூபாய் 14 காசுகளும் நஷ்டம் ஏற்படுகிறது.
இந்த நஷ்டத்தை ஈடுகட்ட இவற்றின் விலையை உயர்த்துவதைத் தவிர வேறு வழி இல்லை என்று மத்திய அரசு கருதுகிறது.
இதுபற்றி பெட்ரோலியத் துறை அமைச்சக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, செப்டம்பர் 14-ந் தேதிக்கு முன் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு பற்றி எந்த முடிவும் எடுக்கப்படமாட்டாது என்றும், விலையை உயர்த்துவது பற்றி பெட்ரோலிய அமைச்சகம் யோசனை எதுவும் கூறவில்லை என்றும், இதுபற்றி நாட்டின் அரசியல் தலைமைதான் தீர்மானிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
பெட்ரோலிய பொருட்கள் விற்பனையில் எண்ணை நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட ரூ.19 ஆயிரம் கோடிக்கு பத்திரங்களை வெளியிட அனுமதி கேட்டு இருக்கிறோம் என்றும் அவர் கூறினார்.