முகேஷ் அம்பானிக்கு USIBC விருது!
, திங்கள், 25 ஜூன் 2007 (19:51 IST)
ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியை 2007 ஆம் ஆண்டிற்கான வணிக பொருளாதார உலக நோக்கிற்கான விருதிற்கு அமெரிக்க-இந்திய வணிகப் பேரவை தேர்வு செய்துள்ளது!இந்தியா - அமெரிக்கா இடையே வணிக உறவை ஏற்படுத்துவதிலும், பொருளாதார சீர்திருத்தத்தை பரப்புவதிலும் முன்னணியில் செயல்பட்டு வரும் அமெரிக்க-இந்திய வணிகப் பேரவை (US India Business Council - USIBC) ஒவ்வொரு ஆண்டும் பொருளாதார வணிக தலைமைப் பண்புகளை வெளிப்படுத்தும் நிறுவனங்களின் தலைவர்களுக்கு இவ்விருதை அளித்து கெளரவதித்து வருகிறது. இந்த ஆண்டிற்கான உலக நோக்கு விருதிற்கு ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியையும், போயிங் விமான நிறுவனத்தின் தலைவர் ஜேம்ஸ் டபிள்யூ மெக்நெர்னியையும் தேர்வு செய்துள்ளது. வாஷிங்டனில் நடைபெறவுள்ள இவ்வமைப்பின் 32வது ஆண்டு மாநாட்டில் இவர்கள் இருவருக்கும் விருதுகள் வழங்கப்படும். இந்நிகழ்ச்சியில் அமெரிக்க அயலுறவு அமைச்சர் கோண்டலீசா ரைஸிற்கு சிறப்பான சேவைக்காக கெளரவ விருது அளிக்கப்படவுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியில் மத்திய வணிக மற்றும் தொழில்துறை அமைச்சர் கமல்நாத் கலந்துகொள்கிறார். விருதைப் பெறுவதற்கு அமெரிக்க செல்லவுள்ள அம்பானி, அமெரிக்க அயலுறவு அமைச்சர் ரைஸ் உள்ளிட்ட அமெரிக்க நிர்வாகத்தின் 3 முக்கிய அதிகாரிகளுடன் எரிசக்தி பாதுகாப்பு, அயல் வணிகம் ஆகியன குறித்து பேசுவார் என்று கூறப்படுகிறது.