ஆசியா உள்ளிட்ட சர்வதேசப் பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட ஏற்றத்தின் எதிரொலியாக இந்தியாவின் பங்குச் சந்தைகளில் இன்று காலை முதலே ஏற்றம் காணப்பட்டு வருகிறது!
மும்பை பங்குச் சந்தை குறியீடு இன்று காலை வர்த்தகம் துவங்கிய சிறிது நேரத்திலேயே 200 புள்ளிகள் உயர்ந்து 14,263 புள்ளிகளைத் தொட்டது. அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ஏற்ற இறக்கம் ஏற்பட்டு பிற்பகல் 1 மணி நிலவரப்படி 150 புள்ளிகள் அதிகரித்து 14,213 புள்ளிகளாக உள்ளது.
தேச பங்குச் சந்தையில் 40 புள்ளிகள் அதிகரித்து 4,185 புள்ளிகளாக ஏற்றம் பெற்றுள்ளது.
ஐ.டி.சி. பங்கு மிக அதிகபட்சமாக 3 விழுக்காடு விலை கூடியுள்ளது. ஹெச்.டி.எஃப்.சி., ஹிண்டால்கோ, ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, சத்யம் கம்யூட்டர், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ரிலையன்ஸ் கேபிட்டல், எஸ்.பி.ஐ., ஓ.என்.ஜி.சி., ஐ.சி.ஐ.சி.ஐ., இன்ஃபோசிஸ், ரன்பாக்ஸி பங்குகள் ஏறுமுகமாகவும், வாகன பங்குகளான டாட்டா மோட்டார்ஸ், மாருதி உத்யோக் போன்ற இறங்குமுகமாகவும் உள்ளன.
கடந்த வாரத்தில் ஒட்டுமொத்தமாக 500 புள்ளிகள் வரை குறைந்த மும்பை பங்குச் சந்தை குறியீடு இன்றைய வாரத்தின் துவக்கத்திலேயே 150 புள்ளிகள் ஏற்றம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.