தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், பி.பி.ஓ. நிறுவனங்கள் விரும்பும் நகரங்களில் சென்னை முதலிடம் பெற்றுள்ளது என்று உலகப் புகழ்பெற்ற டன் & பிரட்ஸ்ட்ரீட் (Dun & Bradstreet) நிறுவனத்தின் ‘India’s Top ITeS and BPO Companies 2008’ ஆய்வு தெரிவிக்கிறது.
கடந்த ஆண்டு சென்னை இரண்டாவது இடத்தில் இருந்தது. அடுத்த இடத்தில் பெங்களூரு உள்ளது. கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த மும்பை இந்த ஆண்டு மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இரண்டாம் நிலை நகரங்களிலும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும், பி.பி.ஓ. நிறுவனங்களும் நல்ல வளர்ச்சி பெற்றுள்ளன. இதன்படி கடந்த ஆண்டு ஆறாவது இடத்தில் இருந்த புனே நான்காவது இடத்தையும், ஏழாவது இடத்தில் இருந்த குர்கான் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளன.
இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சி தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது. முன்னணி நிறுவனங்களில் ஒரு ஊழியர் மூலம் ஆண்டு ஒன்றிற்கு கிடைக்கும் வருமானம் சராசரியாக ரூ.6,00,000 ஆக உள்ளது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், பி.பி.ஓ. நிறுவனங்களின் வருமான வளர்ச்சி ஆண்டிற்கு 20 முதல் 35 விழுக்காடு வரை அதிகரிக்கும்.
ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, மனிதவள மேம்பாட்டுச் சேவைகள், மொழி பெயர்ப்புத் துறை ஆகியவை அடுத்த இரண்டு ஆண்டுகளில் அதிகபட்ச வளர்ச்சியைப் பெறும். டெலிகாம், உடல்நலம் உள்ளிட்ட துறைகள் உத்தரவாதமிக்க துறைகளாக மாறும்.
இவ்வாறு அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
முன்னதாகச் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் ‘India’s Top ITeS and BPO Companies 2008’ ஆய்வினை சிறப்பு விருந்தினரான குவாட்ரோ பி.பி.ஓ. சொல்யூசன்ஸ் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ராமன் ராய் வெளியிட்டார்.
டன் & பிரட்ஸ்ட்ரீட் இந்தியா நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் மற்றும் தலைவர் டாக்டர் மனோஜ் வைஸ் மற்றும் பல்வேறு முன்னணித் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் பங்கேற்றனர்.