அமெரிக்க அதிபராக ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் இந்தியாவில் பிபிஓ பணிகள் பாதிக்கப்படாது என்று மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
பராக் ஒபாமா அமெரிக்க அதிபர் ஆவதற்கு முன்பு, வெளியில் கொடுத்து முடிக்கப்படும் பணி முறை (பி.பி.ஓ.) கட்டுப்படுத்தப்படும் என்று கருத்து தெரிவித்து இருந்தார். இதனால் இந்தியாவிற்கு பெரும் பாதிப்பு உருவாகும் என்று கருதப்படுகிறது.
பராக் ஒபாமா வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இது பற்றி மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திடம் கேட்டதற்கு, இது போன்ற கருத்து பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. ஒபாமா பதவி ஏற்றவுடன் இது ஒருங்கிணைக்கப்பட்ட உலகம் என்பதையும், நாடுகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து பணியாற்றவேண்டியதன் அவசியத்தையும் உணர்ந்து கொள்வார்.
அமெரிக்கா, உலகின் மிகப் பெரிய பொருளாதாரத்தைக் கொண்டது. அதேபோல் இந்தியாவும் சுதந்திரமான மிகப்பெரிய ஜனநாயக சந்தைப் பொருளாதாரத்தைக் கொண்டிருக்கிறது. இரண்டும் ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டும். புதிய நிர்வாகத்தின் கீழ் இந்திய-அமெரிக்க உறவுகள் தொடர்ந்து மேம்பட வேண்டும் என்றும் ப. சிதம்பரம் கூறினார்.