புது டெல்லி: இந்திய தொலைபேசிச் சந்தைக்குள் நுழைய விரும்பும் அயல் நாட்டு முன்னணி தொலைபேசி சேவை நிறுவனங்கள் தங்கள் 3ஜி உரிமம் பெற ஒப்பந்தப்புள்ளிகளுடன் காத்திருக்கும் முன் அத்திட்டத்தை சற்று தள்ளிப்போடுவது நல்லது என்று ஆய்வறிக்கை ஒன்று அறிவுரை செய்துள்ளது.
ஏனெனில் தற்போது உள்ள சூழ் நிலையில் செல்பேசி சேவைத் துறைக்குள் நுழைந்தால், கட்டுப்பாட்டு விதிகள் மற்றும் சந்தைக் காரணிகளால் சிக்கி தவிக்க வேண்டி வரும் என்று ஸ்ட்ராடஜி அனலிடிக்ஸ் (Strategy Analytics)
என்ற ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது.
தற்போது 3ஜி உரிமம் பெற விரும்பி போட்டி வரிசையில் காத்திருக்கும் நிறுவனங்கள், மேலும் சில காலத்திற்கு தங்கள் முடிவை தள்ளி வைக்கலாம் என்று அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
உரிமம் வழங்கல் மற்றும் விலையிடல் கொள்கைகள் மாறுவது போல் தெரிவதால் அவர்கள் காத்திருந்து நுழைய முயற்சிக்க வேண்டும் என்று ஸ்ட்ராடெஜி அனலிடிக் அறிக்கையின் ஆசிரியர் ராகுல் குப்தா கூறுகிறார்.
அயல் நாட்டு நிறுவனங்களான ஏடி&டி, டியூஷ் டெலிகாம், என்.டி.டி. டோகோமோ மற்றும் பிற நிறுவனங்களும் வளர்ந்து வரும் இந்திய செல்பேசி சேவை சந்தையில் தங்களின் தடம் பதிக்க நீண்ட நாட்களாக காத்திருக்கின்றன. ஆனால், தற்போதைய 3ஜி உரிம ஏலக் கொள்கையைப் பார்க்கும்போது அவர்கள் தங்கள் முடிவை தள்ளிப்போடுவதே சிறந்தது என்கிறார் ராகுல் குப்தா.